Hero Image

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?' - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?

TM Krishna/Facebook டி.எம். கிருஷ்ணா

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது.

சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

Ranjani-Gayatri/Facebook ரஞ்சனி-காயத்ரி எதிர்ப்புக்கான காரணம்

அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர்.

Chitravina Ravikiran/Twitter சித்ரவீணா ரவிகிரண் மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம்

இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

Chitravina Ravikiran/Twitter சித்ரவீணா ரவிகிரணின் பதிவு

வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

Trichur Brothers/Twitter திருச்சூர் சகோதரர்களின் கடிதம்

ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மியூசிக் அகாடமி விளக்கம்

இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.

உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

madrasmusicacademy/Instagram தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம் யார் இந்த டி.எம். கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை.

சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

"கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார்.

மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார்.

பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை

"டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன்.

தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

nitylists/Instagram நித்யானந்த் ஜெயராமன் "தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்"

"இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

"கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர்.

டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த்.

BBC எழுத்தாளர் பெருமாள் முருகன் ”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?”

பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன்.

2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா?

"நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP