Hero Image

பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?

Getty Images பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான அச்சமும் பயமுமே முக்கிய காரணமாக இருக்கிறது

சிறு வயதில் எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும் புதர்களும் நிறையவே இருந்தன. அன்று ஒருநாள் மாலைநேரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மின்சாரத் தடை நிகழ்ந்தது. இருட்டிலேயே மீதமிருந்த உணவை முடித்துவிட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டின் முன்புறத்தில் சுவர் ஓரமாக இருந்த குழாய் அருகே சென்றேன்.

அப்போது, மூன்று அடி உயரமே இருந்த மதில் சுவரின் மறுபுறத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு பாம்பு ஊர்ந்து, ஏறி, பொத்தென்று எங்கள் வீட்டுக்குள் விழுந்தது. மெல்லிய நிலவு வெளிச்சத்தில், பாம்பின் தடிமன், நீளம் ஆகியவை மட்டுமே நன்கு தெரிந்தன. என்ன பாம்பு என்பது தெரியவில்லை.

அச்சத்தில் அப்படியே உறைந்துவிட்டேன். குழாயில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. கையில் சாப்பிட்ட தட்டுடன் அதே இடத்தில் நகராமல் நின்றுகொண்டிருந்தேன். அந்த இருட்டிலும், நீர் கொட்டிக் கொண்டிருந்த குழாயை நெருங்கிய பாம்பையே என் கண்கள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அது என்னைக் கடந்து சுவர் ஓரமாகவே ஊர்ந்து தேங்காய்களைப் போட்டு வைத்திருந்த ஒரு மூலையை நோக்கிச் சென்றது.

அதுதான், என் வாழ்வில் நாகப் பாம்பை பார்த்த முதல் அனுபவம்.

பாம்புகளின் அழிவுக்கு காரணமான மனிதர்களின் பயம்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில், பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கியக் காரணமாக இருக்கிறது.

பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு 81 ஆயிரம் முதல் 1,38,000 மரணங்கள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் பாம்பு கடியால் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பது, இயற்கை வைத்தியம் போன்வற்றைப் பாதிக்கப்பட்டவர்கள் நாடிச் செல்வது போன்ற காரணங்களால் பாம்புக் கடி பற்றிய உண்மையான எண்ணிக்கை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
  • பாரதிராஜா பிறந்த நாள்: தமிழ் சினிமாவின் ஓட்டத்தை மடை மாற்றிய 'இயக்குநர் இமயம்'
  • சனாதனம் சர்ச்சை: தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமையாக உருவெடுக்கிறாரா உதயநிதி?
  • AFP பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் இருபக்கமும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது மனிதர்கள் அஜாக்கிரதையும் செயலும்தான் உயிரிழப்புக்கு காரணம்

    பொதுவாக மனிதர்களின் பார்வையில் பாம்புகள் கொடிய உயிரினமாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், பாம்புகள் மனிதர்களைப் பார்த்து பயப்படும் சுபாவம் கொண்டவை என்றும் மனிதர்களின் செயல்களாலும், அஜாக்கிரத்தையாலும்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் கூறுகிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றி வரும் காலிங்கா ஃபவுண்டேசன் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் எஸ்.ஆர்.கணேஷ்.

    “மனிதர்களைத் தீண்டவேண்டும் என்று பாம்புகள் எப்போதும் நினைப்பதே இல்லை. 6 அடி நீளம் உள்ள ஒரு நாகப்பாம்பின் எடை என்பது அதிகபட்சமாக 1 கிலோ இருக்கலாம். அதை 60-70 கிலோ உள்ள ஒரு மனிதர் மிதிக்கும்போது என்ன ஆகும்? வழியால் துடித்துபோகுமல்லவா?

    அத்தகைய சூழலில் தன்னைத் தற்காத்துக்கொள்ள அதனிடம் வாய் மட்டுமே இருக்கிறது. அதைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. நாய்கூட நாம் மிதித்தால் கடிக்கத்தான் செய்யும். அதையேதான் பாம்பும் செய்கின்றன.

    விவசாய நிலங்களில் நடப்பதும் இதுதான். பொதுவாக விவசாய நிலத்தை கடவுளாக விவசாயிகள் பார்ப்பார்கள். எனவே, செருப்பு போடாமல் நடக்கும்போது, தெரியாமல் பாம்பை மிதித்துவிட்டால் அது தீண்டுகிறது,” என்றார்.

    Getty Images ராஜநாகம்

    “இந்தியாவில் சுமார் 15, 16 மாவட்டங்களில் ராஜநாகம் உள்ளன. ஆனால், பல ஆண்டுகள் நடத்திய ஆய்வில் அவை 20 மனிதர்களை மட்டுமே தீண்டியதாக தரவுகள் உள்ளன. ராஜநாகமே இப்படி இருக்கும்போது பிற பாம்புகள் குறித்து எண்ணிப் பாருங்கள். மனிதர்களைப் பார்க்கும்போது அவை பயப்படுகின்றன. ஒதுங்கிப் போகவே நினைக்கின்றன. வேறு வழியே இல்லாத சூழலில்தான் அவை மனிதர்களைத் தீண்டுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்தால் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து அது வெளியே செல்வதற்கு நேரம் கொடுத்தாலே போதும், அதுவாகவே வெளியே சென்றுவிடும் என்றும் கணேஷ் கூறுகிறார்.

    அதைவிடுத்து அறையின் அனைத்து ஜன்னல், கதவுகளையும் மூடிவிட்டு கையில் கம்பு போன்றவற்றுடன் அதை அடிக்க முயலும்போது தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அதற்கு வேறு வழி கிடையாது என்கிறார் அவர்.

    மனிதர்களின் வாழ்விடத்தின் அருகிலேயே இருக்கும் பாம்புகள் அவர்களின் குணாதிசயங்கள் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    “சொல்லப்போனால், நாம் பாம்பைப் பார்ப்பதற்கு முன்பே பலமுறை அவை நம்மைப் பார்த்திருக்கும். ஒருசில வீடுகளில் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்திருக்கும். இதெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடக்கூடிய விஷயமல்ல. பல நாட்கள் அந்தப் பகுதியிலேயே இருப்பதால் மனித நடமாட்டம் எப்போது இருக்காது போன்றவையெல்லாம் அவை அறிந்திருக்கும்.

    பாம்பு அளவுக்கான ரகசியத் தன்மை வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது. பல ஆண்டுகளுக்குக்கூட நமக்குத் தெரியாமலேயே நம் வீட்டுக்கு வந்து செல்லக்கூடும். ஆனால், நம் கண்ணில்படும்போது அவற்றை அடித்துக் கொன்றுவிடுகிறோம். மற்றபடி, நம் கண்ணில் படாமலேயே வீட்டுக்கு வந்து செல்வதை அவை வாடிக்கையாக வைத்திருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    90% பாதிப்புக்கு காரணமாகும் 4 வகை பாம்புகள்

    இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால்தான் ஏற்படுகின்றன. அவை,

    • கண்ணாடி விரியன்: கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.
    • நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகம்: இவை வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.
    • சுருட்டை விரியன்: சுருட்டை விரியன் நீளத்தில் சிறியதாக இருந்தாலும் அதன் தாக்கும் திறன் அபாயகரமானவையாகp பார்க்கப்படுகிறது. இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
    • கட்டு விரியன்: கட்டு விரியன் பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

    பல நேரங்களில் நஞ்சில்லாத சாரைப் பாம்பை கொடிய நஞ்சுள்ள இந்திய நாகம் என்று மனிதர்கள் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். இதனாலும் அவை மனித தாக்குதலுக்கு அதிக இலக்காகின்றன.

    Getty Images ஒரு சில இடங்களில் பாம்புகள் அடிக்கடி வரும். இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்கள் பாம்பு பிடிப்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோரின் எண்களை எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் வீட்டுக்குள் பாம்புகள் வந்துவிட்டால் என்ன செய்வது?

    பாம்பைப் பார்த்து பதற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் பாம்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் விஸ்வா. ஊர்வனம் என்ற அமைப்பின் மூலம் பாம்புகளைப் பிடிப்பது, அது தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்றவற்றில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

    “ஒருசிலர் பாம்பைப் பார்த்ததும் அது வெளியே செல்ல முடியாதபடி அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து விடுவார்கள். அப்படிச் செய்தால் அது வீட்டுக்குள்ளேயே எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளும். அதைப் பிடிப்பது கடினமாகும்," என்று கூறுகிறார் விஸ்வா.

    சிறு வயதில் எனக்கு நாகப் பாம்புடன் நேர்ந்த அந்த முதல் அனுபவத்தின்போது இதுவே நடந்தது. அன்று, அதைப் பார்த்த அச்சத்தில் உறைந்திருந்த நான் சுதாரித்து, வீட்டிலிருந்த பெரியவர்களிடம் கூறிய அடுத்த சில நிமிடங்களில் அந்த நாகப் பாம்பை அடித்துக் கொல்ல, தெரு மொத்தமும் கையில் கம்பி, கட்டைகளுடன் கூடிவிட்டது.

    அது ஒளிந்திருப்பதாக அறியப்பட்ட இடத்தைச் சுற்றியிருந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. சுற்றியும் மக்கள் கூட்டம். மின் தடை நீங்கியவுடன் அனைத்து விளக்குகளையும் போட்டு, வெளிச்சம் மூலை முடுக்கெல்லாம் பரவும் வகையில் பாம்பை தேடிக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மிக தைரியமாக வெறும் கைகளால் பாம்பைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். அந்த வயதில் அதைப் பார்க்கும்போது, மிகுந்த தைரியசாலியாக உள்ளாரே என வியப்பாக இருந்தது. ஆனால், அது மிகவும் தவறான செயல் என்று கூறுகிறார் விஸ்வா.

    Getty Images சிலர் பயிற்சியே இல்லாமல் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். அப்போது பாம்பு அவர்களைத் தீண்டும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

    "சிலர் பயிற்சியே இல்லாமல் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். அப்போது பாம்பு அவர்களைத் தீண்டும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பாம்பைப் பார்த்தால் முடிந்தவரை அதன் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    ஒரு சில இடங்களில் பாம்புகள் அடிக்கடி வரும். இதுபோன்ற இடங்களில் வசிப்பவர்கள் பாம்பு பிடிப்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோரின் எண்களை எப்போது வைத்துக்கொள்ள வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

    வீட்டுக்குள் பாம்புகள் வராமல் இருக்க என்னென்ன செய்யலாம்?
    • வீடுகளின் அருகில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகள் இருந்தால் எலி வரும். எலி வந்தால் அவற்றைத் தேடி பாம்புகள் வரும்.
  • வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
  • வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அவற்றை அடைத்து வைக்க வேண்டும்.
  • வீட்டின் கழிவு நீர் குழாய்களை வலைபோன்ற அமைப்பின் மூலம் மூடி வைக்கவேண்டும்.
  • இரவு நேரங்களில் வீடுகளைச் சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • வீடுகளுக்கு வெளியே குளியலறை, கழிவறை இருந்தால் அவற்றை சுத்தமாகவும் வெளிச்சத்தோடு வைத்திருக்க வேண்டும்
  • 9 ஆண்டுக்கு முன்பு காணாமல் போனவரின் மண்டை ஓடு கழிவுநீர் தொட்டியில் கிடைத்தது - கொன்றவர் யார் தெரியுமா?
  • Getty Images நஞ்சுள்ள பாம்பாக இருந்தாலும் நஞ்சற்ற பாம்பாக இருந்தாலும் கடித்துவிட்டது என்றால் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும் பாம்புகள் கடித்துவிட்டால் என்ன செய்வது?

    பாம்பு கடித்தப் பின் பதற்றமடைவதால் சூழல் மோசமாவதாக விஸ்வா கூறுகிறார்.

    “சிலர் பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்டுவது, அந்த இடத்தை வெட்டிவிடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல், கடித்த பாம்பை மருத்துவர்களுக்குக் காட்ட வேண்டும் எனக் கருதி பாம்பை அடித்துக் கொல்வது போன்றவற்றில் நேரத்தை விரயம் செய்வார்கள். இதையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

    ஒரு சிலரை நஞ்சமற்ற பாம்புதான் கடித்திருக்கும். ஆனால், பாம்பு கடித்துவிட்டது என்பதாலேயே இறந்துவிடுவோம் என்று தேவையற்ற விஷயங்களை நினைக்கும்போது ரத்தக்கொதிப்பு அதிகமாகும். இதன் காரணமாகவும் உயிரிழப்பு நிகழும்.

    எனவே, நஞ்சுள்ள பாம்பாக இருந்தாலும் நஞ்சற்ற பாம்பாக இருந்தாலும் கடித்துவிட்டது என்றால் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அருகில் இருப்பவரை பாம்பு கடித்துவிட்டாலும் அவரை பதற்றமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.

    பாம்புகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பக்கத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

    Getty Images இந்தியாவில் பல பாம்பு இனங்கள் அழிவின் விளிம்புகளில் உள்ளன. அவற்றின் வாழ்விடங்கள் அழித்தொழிக்கப்பட்டு விட்டன பாம்புகளைத் தவிர்க்க முடியாது, பாம்பு கடியைத்தான் தவிர்க்க வேண்டும்

    "அனைத்து இடங்களும் விலங்குகளின் இடங்களாகத்தான் ஒருகாலத்தில் இருந்தது, நாம்தான் அதைப் போய் ஆக்கிரமித்து வீடு கட்டுகிறோம். அப்படியிருக்கும்போது, பாம்புகள் வரத்தான் செய்யும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், நமது முன்னோர்களுக்கு அத்தகைய புரிதல் இருந்தது."

    அதனால்தான், பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொல்லாமல், அவற்றின் இருப்போடு வாழ பழகிக்கொண்டனர் என்கிறார் எஸ்.ஆர். கணேஷ்.

    “இந்தியாவில் பல பாம்பு இனங்கள் அழிவின் விளிம்புகளில் உள்ளன. அவற்றின் வாழ்விடங்கள் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. இதைச் சரி செய்ய வேண்டுமென்றால், பாம்புகள், மக்களுக்கு தீங்குகளை விளைவிக்கும் உயிரினம் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

  • ஜஞ்ஜிரா: சிவாஜி முதல் ஆங்கிலேயர் வரை யாராலும் இந்த கோட்டையை பிடிக்க முடியாதது ஏன்?
  • Getty Images இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால்தான் ஏற்படுகின்றன

    மேலும், "பாம்புகளும், மனிதர்களும் ஒரே இடத்தில் வாழ முடியும். வாகன விபத்துகள் நிகழ்கின்றன என்பதற்காக நாம் வாகனத்தைத் தவிர்க்க முடியுமா?

    எப்படி விபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வது என்பதைத்தானே யோசிப்போம். பாம்புகள் விசயத்திலும் அதேதான். பாம்புகளை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டுவிட வேண்டும். ஏனென்றால், அது முடியாத ஒன்று. பாம்புக் கடியை எப்படி தவிர்ப்பது என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

    ஒருவேளை அன்றைய தினம் நான் பார்த்த அந்த நாகப் பாம்புகூட மனிதர்களிடம் இருந்த தப்பிக்க வேண்டும் என்ற அச்சத்தில்கூட தேங்காய்களுக்கு அடியில் சென்று ஒளிந்திருக்கலாம்.

    நான் அதைப் பார்த்த அச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில், எந்த அசைவையோ அமளியையோ ஏற்படுத்தாமல் நின்றிருந்தேன். ஆகவே, என்னால் அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்ற தைரியத்தில் அமைதியாக என்னைக் கடந்து சென்றிருக்கலாம்.

    அன்று அந்த நாகப் பாம்பின் மனநிலை என்னவாக இருந்திருக்கும், அது ஏன் அப்படி நடந்துகொண்டது என்பது இறுதி வரை தெரியாமலே போய்விட்டது. ஏனென்றால், ஊர் மக்கள் சுற்றி வளைத்து, அதை அங்கிருந்து தப்பவிடாமல் அடித்துக் கொன்றுவிட்டனர்.

    சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

    READ ON APP