Hero Image

மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?

Getty Images அரிசியின் வெவ்வேறு வகைகள்

உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம்.

அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா?

எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

Getty Images தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசியின் வகைகள் என்னென்ன?

தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது.

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான்.

அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ்.

அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் .

இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர்.

Getty Images ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது?

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

"ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே."

"இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ்.

Getty Images கருப்புகவுனி அரிசி கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?

சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “ கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார்.

மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று.

இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும்.

இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர்.

Getty Images மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன?

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர்.

“இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.”

Getty Images காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும் காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா?

பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும்.

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன.

இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது.

Getty Images "பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்” ரேஷன் அரிசி நல்லதா?

பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

“மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர்.

எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ்.

Getty Images “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ். எந்த அரிசியை தேர்வு செய்வது?

இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.”

“அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்”

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும்

பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP