Hero Image

சிறுத்தை நேருக்கு நேராக வந்தால் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

GETTY IMAGES திருமலை - திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்களை சிறுத்தைகள் தாக்கிய இரு சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்தன.

குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் நுழைவதும், அங்கு வசிக்கும் மக்களை அவை தாக்கும் சம்பவங்களும் நாட்டின் ஏதோவொரு மூலையில் அவ்வபோது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவங்களின்போது, ஒருவர் சிறுத்தையை எதிர்பாராமல் எதிர்கொள்ள நேர்ந்தால், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

தெலங்கானா மாநில வனத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரியான சிறிபுரபு மாதவ ராவ் இந்த கேள்விக்கு விடையாக பல்வேறு ஆலோசனைகளை பிபிசியிடம் வழங்கி உள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஜன்னாரம்மில் அமைந்துள்ள கவ்வால் புலிகள் சரணாலயத்தில் துணை வனப் பாதுகாவலராக மாதவ ராவ் பணியாற்றி வருகிறார்.

வெட்கப்படும் சிறுத்தைகள்

சிறுத்தைகள் பொதுவாக வெட்கப்படும் குணம் படைத்தவை. எனவே யாரும் தம்மை உற்றுப் பார்ப்பதை கூட அவை விரும்புவதில்லை.

மனிதர்களின் குரலை கேட்டாலே அவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க, மனித நடமாட்டம் இல்லாத இடத்திற்கு செல்லும் தன்மை கொண்டவை என்று சிறுத்தைகளின் தனித்துவமான குணாதிசயங்கள் குறித்து கூறுகிறார் மாதவ ராவ்.

இதேபோன்று, மனிதர்கள் வனப் பகுதியை சுற்றிப் பார்க்கும்போது, புலிகள் அவர்களின் கண்களில் படும் அளவுக்கு சிறுத்தைகள் அவ்வளவு எளிதில் யாருடைய கண்களிலும் படுவதில்லை.

பொதுவாக தனித்து வாழ விரும்பும் சிறுத்தைகள், இனச்சேர்க்கையின் போது மட்டும் தனது இணையுடன் சேர்ந்து வாழ்கின்றன. தான் பிரசவிக்கும் குட்டியை, ஒரு சிறுத்தை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் பராமரிக்கவும் செய்கிறது.

காடுகளில் உள்ள பாறை குகைகளில் பொதுவாக வாழும் தன்மை கொண்ட சிறுத்தைகள், மான், காட்டுப்பன்றி மற்றும் சம்பார் போன்ற விலங்குகளை பெரும்பாலும் வேட்டையாடுகின்றன.

சிறுத்தையின் உடம்பில் காணப்படும் புள்ளிகள் மேலிருந்து கீழ் வரை ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு சிறுத்தைகளுக்கு இடையே இந்த அம்சம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது ஒவ்வொரு சிறுத்தையும் தனிச்சிறப்பு மிக்கவை.

புலிகளை விட அதிகமான சிறுத்தைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. 2022 ல் மத்திய அரசு வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மொத்தம் 3.682 புலிகள் உள்ளன.

ஆனால், நாட்டில் இருக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை, புலிகளின் எண்ணிக்கையை விட அதிகம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனேகமாக சிறுத்தைகள் பரவி உள்ளன.

“இந்தியாவில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் விகிதாசாரம் 1:8 என்ற அளவில் உள்ளது. அதாவது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் சிறுத்தைகள் உள்ளன” என்கிறார் மாதவ ராவ்.

குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் வர என்ன காரணம்?

வாழ்விடத்தில் ஏற்படும் பாதிப்பு, வேட்டையாடப்படுவது மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சிறுத்தைகள் காடுகளை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. சிறுத்தைகளின் இந்த வருகை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுக்கிறது.

எந்த ஒரு விலங்கும் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியே வருவதில்லை. புறச்சூழல் அழுத்தம் மற்றும் வனப் பகுதிகள் மீதான மனிதனின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் தான் அவை வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய வேண்டியதாகிறது.

அதிவேகமாக ஓடும் திறன் படைத்த சிறுத்தை, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டால், அதை பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார் மாதவ ராவ்.

திருமலையில் சிறுத்தைகள் நடமாட்டம் ஏன்?

திருமலையில் பக்தர்கள் நடைபாதை வனவிலங்குகளின் வாழ்விடத்தில் தான் அமைந்துள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் முழுவதும் காட்டு வழியில் தான் கட்டப்பட்டுள்ளன.

இந்த பாதையின் இருபுறமும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது. எனவே, அந்த வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்காதபடி நாம் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நடைபாதையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைப்பது, விலங்குகள் நடமாடுவதற்கு வழித்தடங்களை நிறுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழியக்கூடும் என்றும் அறிவுறுத்துகிறார் அவர்.

சிறுத்தையிடம் சிக்கினால் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

மனிதர்களுக்கு சிறுத்தைகளால் ஏற்படும் ஆபத்தின் தீவிரம், எவ்வளவு தொலைவில் இருந்து ஒருவர் அதன் பார்வையில் படுகிறார் என்பதை பொறுத்தது.

சிறுத்தை சற்று தொலைவில் இருக்கும் போது, ஒருவரின் பார்வை அதன் மீது யதார்த்தமாக பட்டால், அதை பெரும்பாலும் அது பெரிதாக கருதாது.

வேறு எதிலோ கவனத்தை திரும்பி, அந்த வழியிலேயே சென்று விடும். அத்தகைய சூழலில் சிறுத்தையால் மனிதர்களுக்கு தாக்குதல் ஆபத்து நேரிடாது.

ஆனால், எதிர்பாராத விதமாக குறுகிய இடைவெளியில் நேருக்கு நேர் சிறுத்தையை ஒருவர் எதிர்கொள்ள நேரிட்டால், அப்போது அந்த நபரை சிறுத்தை தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

“அத்தகைய ஆபத்தான தருணத்தில், சிறுத்தையிடம் சிக்கும் நபர், அதனிடமிருந்து தப்பிக்க தனது இரு கைகளையும் உயர்த்தி சத்தமாக குரல் எழுப்ப வேண்டும். அதன் விளைவாக, தம்மை விட உயரமான விலங்கு அருகில் இருப்பதாக கருதி, சிறுத்தை அந்த இடத்தை விட்டு செல்வதற்கு வாய்ப்பு உண்டு. வனவிலங்குகளின் உளவியலை கவனித்தால், அவை தம்மை விட பெரிய விலங்குகளை தாக்குவதில்லை. சிறுத்தையும் அப்படிதான்." என்கிறார் மாதவ் ராவ்

சிறுத்தையிடம் சிக்கினால் என்ன செய்யக்கூடாது?

"சிறுத்தையை கண்டதும் பயத்தில் ஓடவோ, புதருக்குள் ஒளிவோ முயற்சிக்க கூடாது. இதனால் சிறுத்தைகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று மாதவ் ராவ் எச்சரிக்கிறார்.

அதேநேரம், சிறுத்தையை கண்டு பயந்து ஓடினால் அது தாக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இருப்பினும் அது தாக்க முடிவு செய்து விட்டால், ஒருவர் எவ்வளவு வேகமாக ஓடினாலும், அதன் வேகத்திற்கு முன்னால் அவரால் நிற்க முடியாது என்று விளக்குகிறார் ராவ்.

இதேபோன்று புதருக்குள் சென்று ஓடி ஒளிந்தால், அந்த நபரின் உயரும் குறைவாக தெரியும் என்பதுடன், அவரை நான்கு கால் விலங்கு என்று நினைத்து சிறுத்தை தாக்கக்கூடும்.

எனவே, “சிறுத்தையை கண்டால் நீங்கள் ஓடாதீர்கள். அது தூரத்தில் இருந்தால், சில வினாடிகள் அசையாமல் நின்று, இரு கைகளையும் உயர்த்தி, அதை கண்டும் காணாமல் மெதுவாக திரும்பிச் செல்லுங்கள். மாறாக, மிகவும் நெருக்கமாக சிறுத்தையை எதிர்கொள்ள நேர்ந்தால், உங்களின் இரு கைகளையும் உயர்த்தி, கூச்சலிட்டபடி மெதுவாக பின்வாங்குங்கள். அப்போது சிறுத்தை திரும்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது” என்று அறிவுறுத்துகிறார் ராவ்.

மரத்தில் ஏறினால் தப்ப முடியுமா?

மரம் ஏறுவது சிறுத்தைகளின் தனித்தன்மையான திறன்களில் ஒன்றாகும். எனவே அது தன்னை யாரோ தாக்குவது போல் உணர்ந்தால், எளிதில் மரங்களில் ஏறும் வழக்கம் கொண்டவை.

எனவே, மரத்தில் ஏறி நின்றால், சிறுத்தையின் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம் என்பது சரியான அணுகுமுறை கிடையாது என்று கூறுகின்றனர் வன அலுவலர்கள்.

சிறுத்தைகளால் யாருக்கு ஆபத்து அதிகம்?

வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்களும், வன எல்லைகளில் விவசாயம் செய்பவர்களும் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்.

ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சிறுத்தைகளின் தாக்குதலைத் தவிர்க்கலாம் என்கிறார் மாதவ ராவ்.

“மனித முகத்தை ஒத்த முகமூடியை உங்கள் முதுகுப்புறத்தில் அணிவது, சிறுத்தை மற்றும் பிற வனவிலங்குகளின் பிடியில் இருந்து தப்பிக்க எளிய வழி. பொதுவாக வனவிலங்குகள் மனிதனின் பின்பகுதியை தாக்கும் என்பதால், மனிதர்கள் தங்களது முதுகுப்புறத்தில் முகமூடி அணிந்து செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்."

குறிப்பாக வன எல்லையில் விவசாயம் செய்பவர்களையும், கூலித் தொழிலாளர்களையும் முகமூடி அணிந்து குழுவாக செல்ல அறிவுறுத்துகிறோம்.

"வனப்பகுதிக்கு அருகில் இருப்பவர்கள், தங்களது குடியிருப்புக்கு அருகில் இரவில் தீப்பந்தம் போன்றவற்றை ஏற்றி வைத்தால், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அந்தப் பகுதியை நெருங்காது. பழங்குடியினர் பொதுவாக இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்” என்று அறிவுறுத்துகிறார் மாதவ ராவ்.

  • 200 ஆண்டுகள் பழமையான குர்ஆன் கையெழுத்துப் பிரதியை அழிவிலிருந்து மீட்ட கட்டுமானப் பணியாளர்கள்
  • BBC தெலங்கானா மாநில வனத் துறை அதிகாரி மாதவ ராவ் சிறுத்தைகள் மனிதர்களை இரையாக்குமா?

    சிறுத்தைகள் மனிதர்களை இரையாக உண்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மனிதர்களை வேட்டையாடுவது அவற்றின் முன்னுரிமையாக இருப்பதில்லை.

    மாறாக, மனிதர்களால் தங்களுக்கு ஆபத்து நேரும் என்று உணர்த்தால் அப்போதுதான் சிறுத்தைகள் அவர்களை தாக்க முற்படும்.

    வனப்பகுதியில் சுற்றித்திரியும் போது, நீங்கள் அதை அடையாளம் காண்பதற்கு முன்பே, அது உங்களைப் பார்த்திருக்கும்.

    மனிதர்களை ஒப்பிடும்போது, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் உணர்திறன் அதிகம். எனவே, பொதுவாக தங்களின் எல்லையில் மனிதர்கள் நடமாட்டத்தை உணர்ந்தாலே, அவை அச்சுறுத்தாமல் தங்களது இடத்தை விட்டு ஓடிவிடும் என்கிறார் வனத்துறை அதிகாரியான மாதவ ராவ்.

    சிறுத்தை தாக்க நேர்ந்தால்…

    புலியுடன் ஒப்பிடும்போது, சிறுத்தையின் எடை மற்றும் அதன் நக வலிமை குறைவாக தான் இருக்கும். ஒரு சிறுத்தை பொதுவாக 100 முதல் 150 கிலோ எடை இருக்கும்.

    சிறுத்தைகளின் தாக்குதலில் இருந்து தப்பி, மனிதர்கள் உயிர் பிழைத்த சம்பவங்களும் இருக்கின்றன என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

    எவ்வளவோ முயற்சித்தும் சிறுத்தைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலாமல், ஆனால் காயங்களுடன் மனிதர்கள் உயிர் பிழைத்த சம்பவங்கள் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.

    ஆனால் அந்த சூழலை எதிர்கொள்ள ஒருவருக்கு அசாத்தியமான மன தைரியமும், உடல் வலிமையும் தேவை.

    பொதுவாக சிறுத்தை மனிதர்களையோ, பிற விலங்குகளையோ வேட்டையாடும் போது, அதன் நகத்தினால் கழுத்தில் பலமாக கீறும். கழுத்தை தன் வாயால் கடித்து குதற முயலும்.

    “அத்தகைய இக்கட்டான சூழலில் கழுத்தில் கடிபடாமல் இருக்கும் அரிதான நேரத்தில், மனிதர்கள் காயங்களுடன் உயிர் தப்பிக்க வாய்ப்புண்டு” என்கிறார் வனத் துறை அதிகாரியான சிறிபுரபு மாதவ ராவ்.

    சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

    READ ON APP