Hero Image

முதலைகளை கூட இரையாக்கும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி? ஏன்?

Getty Images

பர்மிய மலைப்பாம்புகள் எவர்க்லேட்ஸின் பூர்வீக வனவிலங்குகளைக் கொல்லத் தொடங்கியபோது, ஃப்ளோரிடா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. பவுண்டி வேட்டைக்காரர்களை (வெகுமதிக்காக வேட்டையாடுபவர்கள்) கொண்டு வருவது என்பதுதான் அது.

ஏமி சீவ், பைத்தன் ஹண்ட்ரஸ் (Python huntress) என்றும் அழைக்கப்படுகிறார்.

தெற்கு ஃப்ளோரிடாவின் தெருக்களையும் புல்வெளிகளையும் அவர் கூர்ந்து ஆய்வு செய்கிறார். புல்வெளியில் ஊர்ந்து கழுத்தை நெரித்து சாப்பிடுவதற்கு இரையைத் தேடும் 20 அடி நீளம் அதாவது 6 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷமான பர்மிய மலைப்பாம்பை அவர் தேடுகிறார்.

"அது எப்போது தெருவுக்கு வரும் என்று நமக்குத்தெரியாது. எனவே நாம் தயாராக இருக்கவேண்டும்," என்று அவர் சொல்கிறார்.

மலைப்பாம்புகளை வேட்டையாடுபவர்களுக்கு பரிசு என ஃப்ளோரிடா மாகாணம் அறிவித்தது ஏன்?

Getty Images முதலைகளை இரையாக்கும் ராட்சத மலைப்பாம்புகளை பிடிப்பது ஏன்?

குளிர்கால பகல் நேரத்தில் சீவ் மலைப்பாம்புகளை வேட்டையாடுகிறார். ஆனால், தென் ஃப்ளோரிடாவின் கடும் வெப்பமான கோடையில் அவர் இரவில் வேட்டையாடுவார்.

தனது பெரிய டிரக்கின் பின்புறத்தில் அமர்ந்தபடி, பூச்சிகள் தாக்காமல் இருக்க கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டு சாலையோரங்களை கூர்மையான பார்வையால் அலசுகிறார். காட்டிலிருந்து கால்வாய்க்கு செல்ல வளைந்து நெளிந்து சாலையை கடக்கும் அந்த பாம்பிற்காக காத்திருக்கிறார்.

ஆபத்தான இந்தத் துரத்தலில் அது அளிக்கும் சிலிர்ப்போடு கூடவே முழு சுற்றுச்சூழலை காப்பாற்றும் திருப்தியும் இருப்பதாக சீவ் கூறுகிறார்.

பர்மிய மலைப்பாம்புகள் 1990 களின் நடுப்பகுதியில் செல்லப்பிராணிகளாக ஃப்ளோரிடாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. 1996 முதல் 2006 வரை சுமார் 99,000 மலைப்பாம்புகள் செல்லப்பிராணிகளாக விற்க அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

சில காட்டுக்குள் தப்பிச் சென்றபோது, எலிகள், அணில்கள் மற்றும் பறவைகள் போன்ற இரைகளால் நிரம்பிய சொர்க்கத்தை அவை கண்டன. ஆனால் மான் மற்றும் முதலைகள் உட்பட பெரிய விலங்குகளும் கூட அவற்றுக்கு இரையாயின.

மலைப்பாம்புகள் வாசனை உணர்வைப் பயன்படுத்தி வேட்டையாடுகின்றன என்று நம்பப்படுகிறது. அவை அருகில் ஒளிந்துகோண்டு இரையை பிடித்து அவற்றை நெருக்கிக் கொல்கின்றன. பின்னர் அதை முழுதாக விழுங்கிவிடுகின்றன.

சீவ் 45 மைல் (72 கி.மீ.) வேகத்தில் பயணித்து பாம்பை அடையாளம் காண்கிறார்.

"அவை 85% நேரத்தை நகராமல் செலவிடும். அவை செடிகொடிகளுக்கு இடையே சென்றுவிட்டால் அவற்றை கண்டுபிடிக்க இயலாது. அவை தங்களை சுற்றுப்புறத்தில் திறமையாக மறைந்துக்கொள்ளும். எனவே நீங்கள் தயங்குவதற்கு நேரம் இருக்காது." என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் ஒரு பாம்பை பார்த்ததும் டிரக்கிலிருந்து குதித்து, பாம்பின் மீது பாய்ந்து அதன் தலையின் பின்புறத்தில் பிடிக்கிறார்.

வேட்டையாடுபவர்கள் ஜோடியாக வேலை செய்கிறார்கள். எனவே சீவின் கூட்டாளி பாம்பின் வாயை டேப் மூலம் மூடுவார். சீவ் பிடிப்பது போன்ற பெரிய மலைப்பாம்புகளுக்கு பெரிய, கூர்மையான பற்கள் இருக்கும்.

அவை விஷமற்றவை என்றாலும் ஆழமான காயங்களை ஏற்படுத்தலாம். ஆபத்து இருந்தபோதிலும், சீவ் தனது வேலையில் ஆர்வமாக உள்ளார், "நான் பிடிக்கும் ஒவ்வொரு பாம்பும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதை நான் அறிவேன்." என்று அவர் குறிப்பிட்டார்.

South Florida Water Management District 2022, பைத்தான் சவால் நிகழ்வின் போது விமான என்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்தி மலைப்பாம்புகளைத் தேடும் பொது மக்கள். பவுண்டி ஹண்டர்ஸ்

நான்கு ஆண்டுகளாக தென் ஃப்ளோரிடாவின் நீர் மேலாண்மை மாவட்டத்திற்கான மலைப்பாம்பு அகற்றும் ஏஜெண்டாக சீவ் பணியாற்றினார். அவர் எங்கு வேட்டையாடுகிறார் என்பதைப் பொறுத்து 10 மணிநேரம் வரை அவருக்கு ஒரு மணிநேரத்திற்கு 13 டாலர்கள் (10.22 பவுண்டுகள்) முதல் 18 டாலர்கள் (14.15 பவுண்டுகள்) வரை ஊதியம் வழங்கப்படும்.

மேலும் அவர் பிடிக்கும் ஒவ்வொரு மலைப்பாம்புக்கும் வெகுமதி வழங்கப்படும். 4 அடிக்கு (1.2 மீ) கீழ் உள்ள ஒவ்வொரு மலைப்பாம்புக்கும் ஐம்பது டாலர்கள். ஒவ்வொரு அடிக்கும் கூடுதலாக 25 டாலர்கள் (19.65 பவுண்டுகள்) அளிக்கப்படும். மலைப்பாம்பு உள்ள கூட்டை கண்டறிந்தால் அதற்கு 200 டாலர்கள் (157.19 பவுண்டுகள்) போனஸ் தொகை வழங்கப்படும்.

மலைப்பாம்புகள் கட்டுப்படுத்தப்பட்ட இனம் என்பதால், அவற்றை உயிருடன் எடுத்துச்செல்ல முடியாது. ஃப்ளோரிடாவின் மலைப்பாம்பு ஏஜெண்டுகள் போல்ட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அவற்றைக்கொல்ல பயிற்சி பெற்றுள்ளனர்.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,330 மலைப்பாம்புகளைப் பிடித்து கருணைக்கொலை செய்துள்ளனர். பெரும்பாலானவை 4 அடி (1.2 மீ) க்கும் குறைவான நீளம் கொண்டவை, இருப்பினும் 16 அடி (4.8 மீ) மற்றும் 17 அடி (5.2 மீ) நீளம் கொண்ட 17 பாம்புகளும் கைப்பற்றப்பட்டன.

மறுபுறம் சீவ் மலைப்பாம்புகளை தோலுரித்து பாம்புத்தோல் பொருட்களை உருவாக்கி கூடுதல் பணம் சம்பாதிக்கிறார். மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். எனவே அவர் தனியாக செல்ல ஆரம்பித்தார்.

சீவின் தொழில் ஒரு அசாதாரண தேர்வாகத் தோன்றலாம். ஆனால் ஃப்ளோரிடாவில் மலைப்பாம்புகளை வேட்டையாடுவதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் ஒரு சில நபர்களில் அவரும் ஒருவர்.

Water Management District தெற்கு ஃப்ளோரிடாவில் 2022 பைத்தான் சவாலின் போது மலைப்பாம்பை தலையால் பிடித்துள்ள ஒரு போட்டியாளர். ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் அழிவு

பர்மிய மலைப்பாம்பு ஃப்ளோரிடாவின் எவர்க்லேட்ஸில் வெளிநாட்டு வனவிலங்கு வர்த்தகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. அவை ஒரு காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட செல்லப்பிராணிகளாக இருந்தன.

ஃப்ளோரிடாவில் 18 அடி (5.5 மீ) நீளம் வரை வளரும் ராட்சத மலைப்பாம்புகள், எவர்க்லேட்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் செழித்து வளர்கின்றன. அவற்றுக்கு தீராத பசி உள்ளது. கூடவே இரையும் ஏராளமாக உள்ளது.

"அவை நமது சுற்றுச்சூழலை அழித்துவிட்டன”, என்கிறார் தெற்கு ஃப்ளோரிடாவின் நீர் மேலாண்மை மாவட்டத்தின் மூத்த ஆக்கிரமிப்பு விலங்கு உயிரியலாளர் மைக் கிர்க்லாண்ட். மலைப்பாம்புகளை அகற்றும் திட்டத்தை துவக்கியவர் அவர்.

1990 களின் பிற்பகுதியில் மலைப்பாம்புகள் அங்கு வந்ததிலிருந்து எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் மென்மயிர் விலங்குகளின் எண்ணிக்கை 90-95% குறைந்துள்ளதாக கிர்க்லாண்ட் கூறுகிறார். ஒரு ஆய்வில் ரக்கூன்களில் 99% குறைவு, ஓபோஸம்களில் 99% குறைவு மற்றும் முயல்கள் முழுமையாக இல்லாதது கண்டறியப்பட்டது.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் வனவிலங்குகளால் நிரம்பியிருக்கும். ஒரு மான் அல்லது அணிலை கண்டுபிடிக்குமாறு இப்போது நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். மலைப்பாம்புகள் எங்கள் பூர்வீக வனவிலங்குகளை அழித்துவிட்டன," என்கிறார் கிர்க்லாண்ட்.

2017ஆம் ஆண்டு தெற்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிக் சைப்ரஸ் நேஷனல் ப்ரிசர்வில் பதிவுசெய்யப்பட்ட வீடியோவை கிர்க்லாண்ட் குறிப்பிடுகிறார். ஒரு மலைப்பாம்பு மூச்சுத்திணறல் ஏற்படும் வரை தண்ணீருக்கு அடியில் ஒரு முதலையை வைத்திருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

Amy Siewe ஒரு புரட்சிகர அணுகுமுறை

ஆக்கிரமிப்பு இனங்களை எவ்வாறு அகற்றுவது என்ற சிக்கலான கேள்விக்கு தொடக்கத்தில், கிர்க்லாண்டின் திட்டம் ஒரு புரட்சிகர அணுகுமுறையாக இருந்தது. மலைப்பாம்பு வேட்டைக்காரர்களை - "ஆர்வலர்கள்," என்று கிர்க்லாண்ட் விவரிக்கிறார்.

நீர் மேலாண்மை மாவட்ட நிலங்களுக்கு அவர்களுக்கு தடையற்ற அணுகல் வழங்கப்பட்டது. இது மூன்று மாதகால சோதனை திட்டமாக முதலில் தொடங்கப்பட்டது. திட்டம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று கிர்க்லாண்ட் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திட்டம் இப்போது எட்டாவது ஆண்டை எட்டியுள்ளது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை இருமடங்காக ஆகியுள்ளது.

தற்போது 50 ஊதிய ஒப்பந்ததாரர்கள் ஏஜென்சியில் பணிபுரிகின்றனர். மாநில, கூட்டாட்சி மற்றும் கவுண்டி நிலங்கள் உட்பட ஒன்பது கவுண்டிகளில் அவர்கள் பணிபுரிகின்றனர். 2017இல் நீர் மேலாண்மை மாவட்டத்தால் பணியமர்த்தப்பட்ட "ஒரிஜினல் 25" ஒப்பந்ததாரர்களில் டோனா கலீல் ஒருவர். இன்று வரை 850க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை கலீல் பிடித்துள்ளார்.

"அவை ஒரு ஆக்கிரமிப்பு இனமாக இருப்பதால், அவை தொடர்ந்து பயணித்து தங்களின் சூழலை மாற்றிக்கொள்கின்றன" என்று கலீல் விளக்குகிறார்.

"மேலும் நீங்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றின் வழிமுறைகளை, செயல்பாட்டை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு இடமும் வித்தியாசமானது. அவை இருக்கும் ஒவ்வொரு சூழலும் வித்தியாசமானது. இது சதுரங்கம் விளையாடுவது போன்றது," என்கிறார் அவர்.

திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து ஏஜென்ஸி மாகாணம் முழுவதும் 8,565 மலைப்பாம்புகளை அகற்றியுள்ளது.

Amy Siewe ஏமி சீவ் (வலது ஓரம்) கோடையில் இரவில் வேட்டையாடுகிறார். மேலும் ஒரு நாள் தன்னால் 20 அடி கொண்ட பெரிய பாம்பை பிடிக்கமுடியும் என்று நம்புகிறார்.

ஆனால் மலைப்பாம்புகளை வேட்டையாடுவது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று கிர்க்லாண்ட் கூறுகிறார். கல்வி, கொள்கை மற்றும் புதுமையான அறிவியல் மூலம் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளை அகற்ற பல்முனை அணுகுமுறை அவசியம் என்று அவர் கூறுகிறார்.

சிக்கலைத் தீர்க்க ஏற்கனவே கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், ஃப்ளோரிடாவின் தடைசெய்யப்பட்ட இனங்கள் பட்டியலில் மலைப்பாம்பு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பர்மிய மலைப்பாம்புகளை வாங்குவது, விற்பது அல்லது கொண்டு செல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த இனத்தை ஏற்கனவே செல்லப் பிராணியாக வைத்திருக்கும் எவரும் அவற்றை பதிவுசெய்து மைக்ரோசிப் பொருத்தவேண்டும்.

கூடுதலாக கிர்க்லாண்ட் மற்றும் அவரது குழுவினர் மலைப்பாம்புகளைக் கண்காணிக்கவும் வேட்டையாடவும் தொடர்ந்து புதிய நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். ஒரு திட்டம் ரேடியோ டெலிமெட்ரியைப் பயன்படுத்துகிறது. அதாவது மலைப்பாம்புகளில் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்துவது.

இந்த டிரான்ஸ்மிட்டர்களின் தரவு இரண்டு வெவ்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று மலைப்பாம்புகளின் நடத்தை மற்றும் இனச்சேர்க்கை பழக்கத்தை கண்காணிப்பதை உள்ளடக்கியது. இரண்டாவது, "ஸ்கவுட்" திட்டம். குறியிடப்பட்ட மலைப்பாம்புகள், ’ஸ்கவுட்(உளவாளி) பாம்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அவை வேட்டையாடுபவர்களை பெண் மலைப்பாம்புகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்ல பயன்படுகின்றன. பெண் மலைப்பாம்புகள் ஒரு பருவத்தில் 100 முட்டைகள் வரை இடும் திறன் கொண்டவை.

’மலைப்பாம்புகள் மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்பது எனக்கு முக்கியம். அவற்றின் மீது எந்த தப்பும் இல்லை. இவை இங்கு வாழும் உயிரினங்கள்’ - மைக் கிர்க்லாண்ட்

டெலிமெட்ரி திட்டங்கள் மலைப்பாம்பு வேட்டைக்காரர்களை எவர்க்லேட்ஸ் காட்டுக்குள் ஊடுருவ அனுமதிக்கின்றன. இது 1.5 மில்லியன் ஏக்கர் (607,000 ஹெக்டேர்) பரப்பளவு கொண்டது. இங்கு சதுப்பு நிலங்கள், சதுப்புநில காடுகள், சமவெளிகள் மற்றும் பைன்லேண்ட்ஸ் உள்ளன.

நீர் மேலாண்மை மாவட்டம், ஃப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களைப் பயன்படுத்தி மலைப்பாம்புகளைக் கண்டறியும் கேமரா அமைப்பை உருவாக்கியுள்ளது என்று கிர்க்லாண்ட் விளக்குகிறார்.

ஃப்ளோரிடாவில் உள்ள பிற பாம்புகள் மற்றும் எண்ணற்ற நிலப்பரப்பு பின்னணியில் இருந்தும் பர்மிய மலைப்பாம்பை அடையாளம் காணும்படியாக AI அலாக்ரிதம்கள் இருக்க வேண்டும்.

South Florida Water Management District மிகப்பரந்த எவர்க்லேட்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் மலைப்பாம்புகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஃப்ளோரிடாவின் மலைப்பாம்பு வேட்டையாடும் போட்டி

இந்த பாம்புகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறைய செய்யப்பட்டுள்ளது. ஃப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு அமைப்புடன் இணைந்து நீர் மேலாண்மை மாவட்டம், ஆண்டுதோறும் ஃப்ளோரிடா பைத்தன் சவாலை நடத்துகிறது.

10-நாள் மாரத்தான் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து வரும் போட்டியாளர்கள் 30,000 டாலர்கள்( 23,582 பவுண்டுகள்) வரையிலான பரிசுத் தொகைக்காக போட்டியிடுகிறார்கள். போட்டியின் விதி மிக எளிதானது. மிக நீளமான பர்மிய மலைப்பாம்பைப் பிடிப்பவர் வெற்றி பெறுவார்.

இந்த நேரத்தில்மட்டுமே பாம்புகளை பிடிப்பதற்காக பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. நிகழ்வுக்கு வெளியே மலைப்பாம்பு வேட்டையாடுவதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.

இருப்பினும் இது ஃப்ளோரிடாவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வேட்டையாடுவதிலிருந்து பின்வாங்கச்செய்யவில்லை.

"மக்கள் ஆப்பிரிக்காவில், உலகம் முழுவதும் வேட்டையாடுகிறார்கள். இப்போது அவர்கள் மலைப்பாம்புகளை வேட்டையாட ஃப்ளோரிடாவுக்கு வர விரும்புகிறார்கள்," என்கிறார் முன்னெப்போதையும் விட பிஸியாக இருக்கும் சீவ். பாம்புகளைப் பிடிப்பது எப்படி என்பதை அறிய விரும்பும் உள்ளூர் மக்களும் அவரை பணியமர்த்துகிறார்கள்.

ஒரு விளையாட்டாக மலைப்பாம்புகளை வேட்டையாடுவதை தவிர்க்குமாறு கிர்க்லாண்ட் மக்களிடம் கூறுகிறார். "மலைப்பாம்புகளை மனிதாபிமானத்துடன் அகற்றுமாறு நாங்கள் மக்களை ஊக்குவிக்கிறோம். ஆனால் நீங்கள் எங்கள் ஒப்பந்தக்காரர்கள் எவருடனும் இலவசமாக உடன் செல்லலாம்," என்று அவர் கூறுகிறார்.

Getty Images

"மனிதாபிமான முறையில் மலைப்பாம்புகள் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமானது. இவை தங்களுடைய தவறு ஏதும் இல்லாமல் இங்கு வாழும் உயிரினங்கள். நாங்கள் மிகவும் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம்."

சீவ் மற்றும் கலீல் இருவரும் பாம்பு பிரியர்கள். ”அவற்றை கருணைக்கொலை செய்வது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயம்,," என்று கலீல் கூறுகிறார்.

”ஆனால், என் வேலை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்குத்தெரியும். ஆயிரம் விலங்குகளைக் காப்பாற்ற ஒரு மிருகத்தைக்கொல்வதில் தவறில்லை,”என்றார் அவர்.

"சிறுவயதில் நான் எல்லா இடங்களிலும் தாவி ஓடும் முயல்களைப் பார்த்திருக்கிறேன். வளர்ந்தபிறகு நான் எவர்க்லேட்ஸில் ஒரு முயலைக்கூட பார்த்ததில்லை. போஸமும் இல்லை, பாலூட்டிகளும் இல்லை. ஆனால் இப்போதும் மலைப்பாம்புகளை பார்க்க முடிகிறது. இப்போது அவை பறவைகளையும் முதலைகளையும் சாப்பிடுகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

பவுண்டி ஹண்டர்கள் மலைப்பாம்பை பிடித்த பிறகு அவர்கள் கிர்க்லாண்டின் குழுவுடன் தொடர்புகொள்ள வேண்டும். மேலும் நீர் மேலாண்மை மாவட்ட ஊழியர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் மலைப்பாம்பை அளக்க வேண்டும்.

வேட்டையாடுபவர்கள் மலைப்பாம்பு சடலங்களை தங்கள் விருப்பப்படி அப்புறப்படுத்தலாம் அல்லது அவற்றின் தோலை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.

"இது ஒரு தனித்துவமான திட்டம். ஆனால் இது மிகவும் தனித்துவமான பிரச்சனை," என்கிறார் கிர்க்லாண்ட்.

நள்ளிரவில் சதுப்பு நிலத்தில் 18 அடி (5.5 மீ) பாம்புடன் கட்டிப்புரளும் சிந்தனை உங்களை பின்வாங்கச்செய்யவில்லையென்றால் இந்த வேலைக்காக கிர்க்லாண்டின் நியமனம் உங்களுக்காக காத்திருக்கிறது.

  • பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக சீனா கட்டிய ‘குவாதர்’ துறைமுகம் மூழ்குவது ஏன்?
  • BBC பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால். மலைப்பாம்பு பிடிக்க அமெரிக்கா சென்ற தமிழர்கள்

    2016ஆம் ஆண்டில் இந்த மலைப்பாம்பு பிரச்னை தீவிரமாக இருந்தபோது, ஃப்ளோரிடா வனவிலங்கு மண்டல பாதுகாப்பு குழுவிற்குப் பலரும் ஒரு யோசனையை முன்வைத்தார்கள். அதாவது உலகில் பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள் தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை அழைத்து வந்தால் பர்மிய பாம்புகளைச் சுலபமாகப் பிடித்து விடலாம் என்ற யோசனையை முன்வைத்தார்கள்.

    அதைத் தொடர்ந்து, ஊர்வனவியல் ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரின் உதவியுடன் தமிழ்நாட்டிலிருந்து இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால் மற்றும் அவர்களுடன் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஃப்ளோரிடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு பல மலைப்பாம்புகளை வெற்றிகரமாக பிடித்தனர். அத்துடன் மலைப்பாம்புகளை பிடிப்பது எப்படி என்பது குறித்து அங்குள்ள நபர்களுக்கு இவர்கள் பயிற்சியும் அளித்தனர்.

    மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் கடந்த வருடம் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

    READ ON APP