Hero Image

அமெரிக்க கப்பல் விபத்து: ஏராளமான உயிர்களை காப்பாற்றிய கடைசி நேர அழைப்பு - என்ன நடந்தது?

Getty Images

948 அடி நீள கன்டெய்னர் கப்பலான டாலியின் குழுவினர் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும்போது, மிகவும் தாமதமாகிவிட்டது.

பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.

அது நள்ளிரவு நேரம். கப்பலின் விளக்குகள் திடீரென அணைந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்கள் இருளில் மூழ்கினர்.

கப்பல் இறந்துவிட்டது - மின்னணு சாதனங்கள் ஏதும் இல்லை. இயந்திரம் செயலிழந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். நடப்பது எதையும் தடுக்க முடியவில்லை.

Getty Images என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த கப்பல் மாலுமிகள்

சிக்கலைச் சரிசெய்து மீண்டும் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றன. பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் ஏராளமான அலாரங்கள் ஒலித்தன.

கப்பலில் இருந்த ஒரு உள்ளூர் மாலுமி வெறித்தனமாக கட்டளையிட்டார். சுக்கான் துறைமுகத்திற்கு கப்பலைத் திருப்பவும், பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க நங்கூரத்தை இறக்கவும் பணியாளர்களிடம் கூறினார்.

எமர்ஜென்சி ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டதாக நம்பப்பட்டாலும், கப்பல் அதன் என்ஜின்களின் திறனை மீண்டும் பெறவில்லை.

மாலுமிகள் வேறு வழியின்றி தவித்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30க்கு சற்று முன், அவர்கள் கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்தனர். கப்பல் மோதப்போகிறது என்று எச்சரித்தனர்.

"ஒரு கப்பல் நெருங்கி வருகிறது, அது திசைமாற்றி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது," என்று மேரிலாந்து போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ரேடியோ டிராஃபிக்கில் சிறிது நேரத்திற்குப் பிறகு கூறுவதைக் கேட்க முடிந்தது.

Getty Images பல உயிர்களை காப்பாற்றிய அவசர அழைப்பு

"நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் வரை, நாங்கள் எல்லா போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்." என்று அவர் கூறிக் கொண்டிருந்தார்.

மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பல் குழுவினரை "ஹீரோக்கள்" என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணம். அவர்களின் விரைவான நடவடிக்கை "உயிர்களைக் காப்பாற்றியது" என்று கூறினார். ஏனெனில் அழைப்புக்கும் மோதலுக்கும் இடையிலான இரண்டு நிமிடங்களில் பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்தை அதிகாரிகளால் நிறுத்த முடிந்தது.

ஆனாலும், 2.4 கிமீ நீள பாலத்தின் மீது ஒரு கான்கிரீட் தூணில் டாலி கப்பல் மோதுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இருண்ட, குளிர்ந்த நீரில் துண்டு துண்டாக இடிந்து விழுந்தது.

பாலத்தில் பணிபுரியும் ஒரு சாலைக் குழுவைச் சேர்ந்த 6 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

Getty Images மேரிலேண்ட் மக்களுக்கு முக்கியமான பாலம்

ஆறு தொழிலாளர்கள் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளின் குடிமக்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிபிசி இதை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. கருத்துக்காக தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது.

கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள். இந்தியாதான் உலகளாவிய கடல்வழித் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது, ஆளுநர் மூர் உட்பட நகரத்தில் பலரை உலுக்கியது.

"நாள்தோறும் சுமார் 30,000 மேரிலேண்ட் மக்களுக்கு இது ஒரு வழக்கமான பயணப் பாதையாகும்.

"47 ஆண்டுகளுக்கும் மேலாக, இது எங்களுடன் இருந்தது." என்று ஆளுநர் மூர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைவரான ஜெனிஃபர் ஹோமண்டி, புலனாய்வாளர்கள் இப்போது பயணத் தரவுப் பதிவேட்டில் இருந்து தரவை ஆய்வு செய்ய முற்படுவார்கள் என்று கூறினார்.

செவ்வாய்க் கிழமை காலை பால்டிமோரில் சூரியன் உதித்தபோது, பாலத்திற்கு அருகிலுள்ள பலதரப்பட்ட மக்கள் பாலத்தின் மீது கப்பல் மோதிய காட்சியைக் கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

"நான் அதை உணர்ந்தேன்... வீடு முழுவதும் அதிர்ந்தது," என்று தண்ணீருக்கு அருகில் வசிக்கும் ஜான் ஃபிளான்ஸ்பர்க் பிபிசியிடம் கூறினார்.

EPA நிகழ்விடத்தில் மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மூர். பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம்

காணாமல் போனவர்களைத் தேடுவதில் தங்கள் கவனம் உள்ளது என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும், இந்த சம்பவம் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான பால்டிமோர் துறைமுகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேரிலாந்து செனட்டர் பென் கார்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீர்வழிப்பாதையை மீண்டும் திறப்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு "முக்கியமானதாக" இருக்கும் என்றார்.

எஃகு மற்றும் அலுமினியம் முதல் விவசாய உபகரணங்கள் வரையிலான பொருட்களுக்கான முக்கிய பிராந்திய மையமாக இந்த துறைமுகம் உள்ளது, மேலும் இது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேரிலாண்ட் துறைமுக நிர்வாகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு குறைந்தது 750,000 வாகனங்களை இந்தத் துறைமுகம் கையாண்டதாகக் காட்டுகிறது.

டாலி கப்பல் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறை அல்ல.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் 2016 ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் மற்றொரு மோதலில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP