Hero Image

மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியுற்ற நிறுவனங்கள் இந்த கட்சிக்கு பணத்தை வாரி இறைத்தது ஏன்?

Getty Images

இந்தியாவில் மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கான செலவு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்தே.

இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மலேரியா, கோவிட் அல்லது இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல பிரபலமான மருந்துகள் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்து வருவது தெரிந்தால் அது சாமானியர்களுக்கு கவலையளிக்கக் கூடும்.

அதே நேரத்தில் மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்கள், கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியது தெரியவரும் போது விஷயம் இன்னும் தீவிரமாகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளின் பகுப்பாய்விலிருந்தும், தேர்தல் ஆணையத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

தரவுகளை ஆய்வு செய்ததில், 23 மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு சுமார் 762 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த எந்தெந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன என்பதை முதலில் பார்ப்போம். அந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிக நிதி பெற்ற கட்சி எது? என்ன காரணம்?

Getty Images 1. டோரெண்ட் ஃபார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட்

• இந்த நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது.

• 2018 மற்றும் 2023 க்கு இடையில் இந்த நிறுவனம் தயாரித்த மூன்று மருந்துகளின் மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.

• இந்த மருந்துகள் Deplatt A 150, Nikoran IV 2 மற்றும் Lopamide.

• Deplet A 150 மாரடைப்பை தடுக்கிறது மற்றும் Nicoran IV 2 இதயத்தின் வேலைச்சுமையை குறைக்கிறது. லோபாமைடு (Lopamide) குறுகிய கால அல்லது நீண்ட கால வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது

• இந்த நிறுவனம் 2019 மே 7 முதல் 2024 ஜனவரி 10 ஆம் தேதி வரை 77.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• இந்த 77.5 கோடி ரூபாயில் 61 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்டது.

• இந்த நிறுவனம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு 7 கோடியும், காங்கிரஸுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கியது.

2. சிப்லா லிமிடெட்

• சிப்லா லிமிடெட்டின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மும்பையில் உள்ளது.

• 2018 மற்றும் 2023 க்கு இடையில், இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் ஏழு முறை மருந்து தரப் சோதனைகளில் தோல்வியடைந்தன.

• மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் ஆர்சி கஃப் சிரப், லிப்வாஸ் மாத்திரைகள், ஒன்டான்செட்ரான் மற்றும் சிப்ரெமி ஊசி போன்றவை அடங்கும்.

• சிப்ரெமி ஊசியில் கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளது.

• லிப்வாஸ், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

• புற்றுநோய் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்க ஒண்டான்செட்ரான் பயன்படுத்தப்படுகிறது.

• இந்த நிறுவனம் 2019 ஜூலை 10 முதல் 2022 நவம்பர் 10 ஆம் தேதிக்கு இடையே 39.2 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

• இவற்றில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பாஜகவுக்கும், 2.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் காங்கிரசுக்கும் கொடுக்கப்பட்டன.

Getty Images 3. சன் பார்மா லேபரட்டரீஸ் லிமிடெட்

• சன் பார்மா லேபரட்டரீஸ் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

• 2020 முதல் 2023 வரை ஆறு முறை இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளின் மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.

• சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் கார்டிவாஸ், லாடோப்ரோஸ்ட் ஐ ட்ராப்ஸ் மற்றும் ஃப்ளெக்சுரா டி ஆகியவை அடங்கும்.

• கார்டிவாஸ் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான மார்பு வலி (அன்ஜைனா) மற்றும் இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

• 2019 ஏப்ரல் 15 மற்றும் 2019 மே 8 ஆகிய நாட்களில் இந்த நிறுவனம் மொத்தம் 31.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

4. ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட்

• ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெடின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.

• 2021 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தயாரித்த ரெம்டெசிவிர் மருந்துகளின் ஒரு தொகுதியில் தரம் இல்லாதது பற்றி பிகாரின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு கூறியது.

• கோவிட் தொற்றுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவிர் பயன்படுத்தப்படுகிறது

• 2022 அக்டோபர் 10 மற்றும் 2023 ஜூலை 10 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிறுவனம் 29 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

• இதில் பாஜகவுக்கு 18 கோடியும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு 8 கோடியும், காங்கிரஸுக்கு 3 கோடியும் கொடுக்கப்பட்டது.

Getty Images 5. ஹெட்ரோ ட்ரக்ஸ் லிமிடெட் மற்றும் ஹெட்ரோ லேப்ஸ் லிமிடெட்

• இந்த நிறுவனங்களின் தலைமையகம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது.

• 2018 மற்றும் 2021 க்கு இடையில் இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் தொடர்பாக நடத்தப்பட்ட 7 மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.

• மருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் ரெம்டெசிவிர் ஊசி, மெட்ஃபோர்மின் மற்றும் கோவிஃபோர் ஆகியவை அடங்கும்.

• ரெம்டெசிவிர் மற்றும் கோவிஃபோர் ஆகியவை கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ஃபோர்மின் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

• ஹெட்ரோ ட்ரக்ஸ் லிமிடெட் 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 ஜூலை 11 ஆகிய தேதிகளில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• இந்தப் பத்திரங்கள் அனைத்தும் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சிக்கு வழங்கப்பட்டன.

• ஹெட்ரோ லேப்ஸ் லிமிடெட், 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• இதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கும் கொடுக்கப்பட்டது.

6. இண்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட்

• இண்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது.

• 2020 ஜூலையில் இந்த நிறுவனம் தயாரித்த எனாபிரில் மருந்தின் சோதனை தோல்வியடைந்தது.

• எனாபிரில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாரடைப்புக்குப் பிறகும் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது.

• இந்த நிறுவனம் 2022 அக்டோபர் 10 ஆம் தேதி 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

Getty Images 7. ஐபிசிஏ லபோரட்ரீஸ் லிமிடெட்

• இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.

• 2018 அக்டோபரில் இந்த நிறுவனம் தயாரித்த லாரியாகோ மாத்திரையின் மருந்து தரப் சோதனை தோல்வியடைந்தது.

• மலேரியாவைத் தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் லாரியாகோ பயன்படுத்தப்படுகிறது.

• 2022 நவம்பர் 10 முதல் 2023 அக்டோபர் 5 ஆம் தேதி வரை இந்த நிறுவனம் 13.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

• இதில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பாஜகவுக்கும், 3.5 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கும் வழங்கப்பட்டது.

8. க்ளென்மார்க் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட்

• இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

• 2022 மற்றும் 2023 க்கு இடையில், இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளின் ஆறு மருந்து தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.

• மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் டெல்மா ஏஎம், டெல்மா எச் மற்றும் ஜிடென் மாத்திரைகள் அடங்கும்.

• டெல்மா ஏஎம் மற்றும் டெல்மா ஹெச் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. நீரிழிவு நோய் சிகிச்சையில் ஜிட்டென் மாத்திரை (Ziten Tablet) பயன்படுகிறது.

• இந்த நிறுவனம் 2022 நவம்பர் 11 ஆம் தேதி 9.75 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது.

Getty Images கட்சிகளுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிதி வழங்கியது ஏன்?

கே. சுஜாதா ராவ், இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலராக பணியாற்றியுள்ளார்.

சிவில் சர்வீஸ் ஊழியராக தனது 36 ஆண்டுகால பணியில் 20 ஆண்டுகளை சுகாதாரத் துறையில் பல்வேறு பதவிகளில் அவர் செலவிட்டுள்ளார்.

"எந்தப் பிரதிபலனும் இல்லாமல் (quid pro quo) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? மருந்து நிறுவனங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? கட்டுப்பாடு அரசின் கைகளில்தான் உள்ளது. ஒரு நிறுவனம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சிக்கு பணம் கொடுத்திருந்தால், அவர்களிடமிருந்து பலன் பெறுவதற்காகவே இது செய்யப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவு. நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு அரசு ஏதேனும் பலன் அளித்ததா இல்லையா என்பது வேறு விஷயம்," என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக எப்போதுமே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது என்று கூறும் சுஜாதா ராவ், இந்த நிறுவனங்களின் தரம் தொடர்பாக சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

“தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த பிறகு இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு நிறுத்தியிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி எந்த தொடர்பும் இல்லை என்றால், அதனை அரசுடன் நல்லுறவை உருவாக்க தனியார் துறையின் முதலீடா என்று சொல்வது கடினம். மருந்து நிறுவனங்கள் நிச்சயமாக பாதுகாப்பின்மையை உணருகின்றன,” என்றார் அவர்.

இந்த மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தரப் சோதனையில் தோல்வியடைந்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? ஆம் எனில், பத்திரங்கள் மூலம் நன்கொடை செலுத்தப்பட்ட பிறகு அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதா? போன்றவை குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், தர சோதனைகள் மற்றும் ஒப்புதல்கள் அளித்தல் ஆகியவை தொடர்பாக அரசு அவர்களின் வணிகங்களில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஏதாவது ஒரு விஷயத்திற்கு அனுமதி வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டால் கூட இந்த நிறுவனங்களுக்கு சுமை அதிகமாகும். ஒருவேளை இவை அனைத்தையும் தவிர்க்கவே இந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கின்றன என்று நம்பப்படுகிறது.

ரெய்டுக்கு பிறகு எந்த கட்சிக்கு பணம் கொடுத்தன?

எஸ்பிஐ முதல் தொகுப்பில் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், அமலாக்க இயக்குநரகம் அல்லது வருவான வரித்துறையின் சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள் சில நாட்களிலேயே தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன என்று நாங்கள் சொல்லியிருந்தோம்.

இதேபோல், ஒரு நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்குவதும் பின்னர் சோதனைக்கு உள்ளாவதும் அதன் பிறகு மீண்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிகழ்வுகளும் உள்ளன.

இந்த நிறுவனங்களில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஒரு மருத்துவமனையும் அடங்கும். அமலாக்க இயக்குநரகம் (ED) அல்லது வருமான வரித் துறையால் ரெய்டு செய்யப்பட்ட அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி எந்த அரசியல் கட்சிகளுக்கு அளித்தன என்பதைப் பார்ப்போம்.

யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

• யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமையகம் தெலங்கானாவில் உள்ளது.

• இந்த நிறுவனம் 2021 அக்டோபர் 4 முதல் 2023 அக்டோபர் 11 ஆம் தேதி வரை 162 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• 2020 டிசம்பர் 22 ஆம் தேதி வருமான வரித் துறை அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது.

• 2021 அக்டோபர் 4 முதல் இந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கத் தொடங்கியது.

இந்த நிறுவனம் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு 94 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியது. மேலும் அந்த நிறுவனம் காங்கிரசுக்கு 64 கோடி மதிப்பிலான பத்திரங்களையும், பாஜகவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையும் வழங்கியது.

Getty Images டாக்டர் ரெட்டீஸ் லேப்

• தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இதன் தலைமையகம் உள்ளது.

• 2019 மே 8 முதல் 2024 ஜனவரி 4 வரை 84 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

• சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை 2023 நவம்பர் 12 ஆம் தேதி சோதனை நடத்தியது.

• 2023 நவம்பர் 17 அன்று இந்த நிறுவனம் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• 2024 ஜனவரி 4 ஆம் தேதி இந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

இந்த நிறுவனம் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு 32 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியது. மேலும் பாஜகவுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களும், காங்கிரசுக்கு 14 கோடி ரூபாய்க்கான பத்திரங்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 கோடி ரூபாய்க்கான பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரபிந்தோ ஃபார்மா

• அரபிந்தோ ஃபார்மாவின் தலைமை அலுவலகம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது.

•இந்த நிறுவனம் 2021 ஏப்ரல் 3 முதல் 2023 நவம்பர் 8 வரை 52 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• 2022 நவம்பர் 10 ஆம் தேதி நிறுவனத்தின் இயக்குநர் பி சரத் சந்திர ரெட்டி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டார்.

• 2022 நவம்பர் 15 ஆம் தேதி நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. இவை அனைத்தும் பாஜகவுக்கு அளிக்கப்பட்டது.

வேறு எந்த மருந்து நிறுவனங்கள் தேர்தல் நன்கொடை அளித்தன?

தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்த இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை மருந்து தரப் சோதனையில் தோல்வியடைந்த நிறுவனங்களாகவோ அல்லது ED அல்லது வருமான வரித்துறையால் ரெய்டு செய்யப்பட்ட நிறுவனங்களாகவோ உள்ளன.

இந்த நிறுவனங்களைத் தவிர வேறு சில நிறுவனங்களும் பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளன.

Getty Images நாட்கோ ஃபார்மா

• நாட்கோ ஃபார்மாவின் தலைமையகம் ஐதராபாத்தில் உள்ளது.

• இந்த நிறுவனம் 2019 அக்டோபர் 5 முதல் 2024 ஜனவரி 10 வரை, 69.25 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

• இதில் பிஆர்எஸ் கட்சிக்கு 20 கோடியும், பாஜகவுக்கு 15 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 12.25 கோடியும் வழங்கப்பட்டது.

எம்எஸ்என் ஃபார்மாகெம் லிமிடெட்

• இதன் தலைமை அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது.

• இந்த நிறுவனம் 2022 ஏப்ரல் 8 மற்றும் 2023 நவம்பர் 16 ஆகிய தேதிகளில் மொத்தம் 26 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

• இதில் பிஆர்எஸ் கட்சிக்கு ரூ. 20 கோடியும், பாஜகவுக்கு ரூ. 6 கோடியும் கொடுக்கப்பட்டது.

யூஜியா ஃபார்மா ஸ்பெஷாலிட்டீஸ்

• இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது.

• இந்த நிறுவனம் 2023 நவம்பர் 8 அன்று 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது.

அலெம்பிக் ஃபார்மசூட்டிக்கல்ஸ்

• குஜராத்தின் வதோதராவில் இதன் தலைமையகம் உள்ளது.

• இந்த நிறுவனம் 2022 நவம்பர் 14 முதல் 2023 ஜூலை 5 வரை, 10.2 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது.

ஏபிஎல் ஹெல்த்கேர் லிமிடெட்

• ஏபிஎல் ஹெல்த்கேர் லிமிடெட் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

• இந்த நிறுவனம் 2023 நவம்பர் 8 ஆம் தேதி 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

• இந்த பத்திரங்கள் அனைத்தும் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP