Hero Image

அன்று ஆட்டோ ஓட்டுநர், இன்று 60 லட்சம் பேர் பின்தொடரும் யூடியூபர் - இர்ஃபான் சாதித்தது எப்படி?

Mohamed Irfan/FB முகமது இர்ஃபான், யூடியூபர்

“மூணு வருஷமா ஆட்டோ ஓட்டிருக்கேன். ஸ்கூல் பசங்களை ஆட்டோல கூட்டி போய் விடுவேன். ஆம்னி வண்டியும் ஓட்டுவேன். இந்த வேலையை செஞ்சிட்டே காலேஜ்ல படிச்சேன். வாடகை குடுக்க கஷ்டப்பட்டிருக்கோம். மளிகைக் கடை பொருட்களைக்கூட கடனில்தான் வாங்குவோம். சில நேரம் அந்தக் கடனையும் அடைக்க முடியாமல் போயிருக்கு.

ஒரு விஷயத்துல தொடர்ந்து உழைச்சா முன்னேறலாம்னு நினைச்சேன். இறைவன் அருளால் இப்போ இந்த நிலைக்கு வந்திருக்கேன்."

இவை பிரபல யூடியூபர் இர்ஃபான் உதிர்த்த வார்த்தைகள்.

சுருட்டை முடி, எதார்த்தமான பேச்சு, உற்சாகம் தொணிக்கும் குரல்... இதுதான் இர்ஃபான். Irfan’s View என்கிற யூடியூப் சேனல் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயம்.

சென்னைதான் பூர்வீகம். பள்ளி, கல்லூரியில் ஒரு சராசரி மாணவர். நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். பிரபலமடைய வேண்டும் என்பது ஆரம்பக்கால ஆசை. 2016 நவம்பரில், யூடியூப் பெரிதாக மக்கள் கவனத்தை ஈர்க்காத நேரத்தில் தனது Vlog பயணத்தைத் துவங்கியிருக்கிறார்.

கிடைத்த நல்ல வேலைகளை விட்டுவிட்டு, எதிர்ப்புகளை மீறி முழுநேர யூடியூபராகி தொடர்ச்சியான உழைப்பின் மூலம் யூடியூபில் மட்டும் இர்ஃபான் அறுவடை செய்தது சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இர்ஃபானை பின் தொடர்வோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 60 லட்சம். அதாவது சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகைக்கு நிகரானது.

சினிமா விமர்சனங்களில் தொடங்கி, வெவ்வேறு பகுதிகளின் உணவு வகைகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், பிரபலங்களுடனான நேர்காணல்கள், அவ்வப்போது சில பிராங்க் நிகழ்ச்சிகள் என இர்ஃபானின் வித்தியாசமான அணுகுமுறை இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்த்திருக்கிறது.

பரபரப்பான காலைப் பொழுதில் இர்ஃபானை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ஆரம்பக் காலப் பயணம், பணிச்சுமை, யூடியூபர்களின் வளர்ச்சி, பிரபலங்களுடனான நேர்காணல், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் வழங்கிய தேசிய படைப்பாளிகள் விருது (National Creators Award 2024) உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அவருடன் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் இதோ...

இனி இர்ஃபான் பேசுவார்.

  • செருப்பு தைப்பவர் காட்டிய பாதையால் மாறிய வாழ்க்கை: கறிக்கடை வைத்திருந்தவர் யூட்யூபர் ஆன கதை
  • நெருக்கடிக்கு நடுவிலும் கனவைத் துரத்திய இர்ஃபான் Mohamed Irfan/FB முகமது இர்ஃபான்

    யூடியூப் பயணத்தைத் துவங்குவதற்கு முன்பு பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். பிரபலமாக வேண்டும் என ஒரு ஆசை இருந்தது. ஆனால் அது எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. யூடியூப் சேனலை துவங்கினேன். வாரத்தில் ஒரு வீடியோ தயாரித்து வெளியிடுவேன். ஒரு விஷயத்தைச் செய்தால் நிலையாகச் செய்ய வேண்டும் என அன்றே முடிவு செய்தேன். ஆரம்பத்தில் நிலையாகத் தொடங்கியதுதான் இன்று வரை தொடர்கிறது.

    நான் உணவகம் ஒன்றில் 2016ஆம் ஆண்டு மேலாளராக வேலை செய்துகொண்டிருந்தேன். விடுமுறை கிடைக்கும்போது வாரத்தில் ஒரு வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு முழுநேர யூடியூபராக மாற முடிவு செய்தேன். வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யூடியூபை நம்பி வேலையை விடுவது பலருக்கும் வருத்தமாக இருந்தது.

    வாடகை கொடுப்பதற்கு சிரமப்பட்டிருக்கிறேன். மளிகைப் பொருட்களை வாங்குவதில் பொருளாதார நெருக்கடி இருந்திருக்கிறது. அனைத்தையும் சரி செய்ய உழைத்தால் மட்டுமே முடியும் என்பதில் உறுதியாக நம்பினேன். ஒரு யூடியூபராக கடினமாக உழைத்தேன். வேலையை விட்ட பிறகு வாரத்தில் ஒரு வீடியோ வெளியிடுவது சரியாக இருக்காது என்பதை உணர்ந்தேன். அதனால் தினமும் ஒரு வீடியோவை வெளியிட உழைத்தேன். தற்போது இந்த நிலையை எட்டியிருக்கிறேன்.

    காலையில் ஆட்டோ ஓட்டுநர் மாலையில் கல்லூரி படிப்பு

    அப்பா வேன் ஓட்டுநர். அவரிடம் ஆம்னி, ஆட்டோ ஆகிய வாகனங்கள் இருந்தது. அவர் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிடும் பணிகளைச் செய்து வந்தார். அவரைப் போலவே நானும் 3 வருடங்கள் ஆட்டோ ஓட்டினேன்.

    காலை, மதியம் என இரு வேளைகளில் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்று விடுவேன். இந்த வேலையை தினமும் செய்தாக வேண்டும். ஆம்னி வேனும் ஓட்டியுள்ளேன். அதன் பிறகு கல்லூரி செல்வேன்.

    'இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரியாது'

    ஒரு பெரிய யூடியூபராவேன் என முதலில் எனக்கு நம்பிக்கை இல்லை. யூடியூபருக்கென ஒரு மேடை கிடைக்கும். விருதுகள் கிடைக்கும் என்பதெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    யூடியூபில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதும் எனக்கு அப்போது தெரியாது. நான் ஒரு நடிகராகியிருந்தாலும்கூட எனக்கு இவ்வளவு பெயர் கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.

    ஒரு யூடியூபராக நான் இப்போது எங்கு சென்றாலும் மக்களிடம் எனக்கு வரவேற்பு இருக்கிறது. பள்ளி கல்லூரிகளில் விருந்தினராக அழைக்கிறார்கள். யூடியூப் குறித்து பாடம் எடுக்கச் சொல்கிறார்கள். மக்கள் எனக்கு அங்கீகாரம் வழங்கியதாக உணர்கிறேன்.

  • கேரளாவின் 'பேய் நகரம்': 2 மாடி வீட்டில் தனியாக வாழும் பெண் - 'காலியான ஊரில்' என்ன நடக்கிறது?
  • 'அதிக பணிச்சுமை மன அழுத்தம் தந்திருக்கிறது' Mohamed Irfan/FB அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல உணவு யூடியூபர் சோன்னியுடன் இர்ஃபான்.

    நான் நிறுவனங்களில் பணிபுரிந்தபோதுகூட இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். 5 நாட்கள் தினமும் 9 மணிநேரம் வேலை செய்துவிட்டு வார இறுதியில் ஓய்வெடுக்க முடியும். ஆனால் இந்தத் தொழிலில் விடுமுறை என்பதே கிடையாது.

    தொழில் முனைவோராவது நல்ல விஷயம் எனச் சொல்வார்கள். பணம் சம்பாதிக்கலாம், ஆனால் நேரம் கிடைப்பது அரிது. உங்களுக்கென உங்கள் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்குவதும் சிரமம். தொழில் முனைவோர் 24 மணிநேரமும் தொழில் குறித்து மட்டுமே யோசிக்க வேண்டும். அது சில நேரம் கடுமையான மன உழைச்சலைத் தந்திருக்கிறது. சில நேரம் கடுமையான கோபம் வரும், சில நேரங்களில் கத்தி அழ வேண்டும் என அழுத்தமாக இருக்கும்.

    அதிகமான உணவு சாப்பிடுவதால் சில நேரங்களில் உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்படும். வாடிக்கையாக 2 மருத்துவமனைக்குச் செல்வேன். நான் உள்ளே நுழைந்தாலே மருத்துவர்கள் எனக்கு இதுதான் பிரச்னை என யூகித்து விடுவார்கள். 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது கிடைக்கும் அந்த ஓய்வை மகிழ்ச்சியுடன் அனுபவித்திருக்கிறேன். காரணம், நீங்கள் வேலை பார்க்கத் தேவையிருக்காது. எந்தக் கவலையும் இல்லை.

    யூடியூபில் ஆயிரக்கணக்கான கிரியேட்டர்ஸ் இருக்கின்றனர். இனி இதில் சம்பாதிக்க முடியாது எனச் சொல்வதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சொற்மான எண்ணிக்கையில்தான் தரமான கிரியேட்டர்ஸ் இருக்கின்றனர். நல்ல தரமான வீடியோக்களை மக்களுக்குக் கொடுத்தால் அதை ரசிப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

    'திரைத்துறையினரும் எங்களை கவனிக்கிறார்கள்' Mohamed Irfan/FB

    இந்த அனுபவம் நல்லா இருக்கு. படத்தில் பார்த்தவர்கள் நம்மைத் தேடி வந்து நேர்காணலில் பங்கேற்பது நன்றாக இருக்கிறது. யூடியூப் ஆரம்பக் காலத்தில் சினிமா டிரைலர்கள், விமர்சன காணொளிகளை மட்டுமே கொண்டிருந்தது.

    சினிமா கலைஞர்களை யூடியூபில் பார்க்க வந்தவர்கள்தான் எங்களைப் போன்றவர்களையும் கவனிக்கத் தொடங்கினார்கள்.

    இப்போது நாம் வளர்ந்த பிறகு, அவர்களின் திரைப்படங்களுக்காக நேர்காணல் செய்வது ஆரோக்கியமான விஷயம் என்றே உணர்கிறேன். திரைத்துறையினரும் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    அரசியல் தலைவர்களுடனான நேர்காணல் சாத்தியமானது எப்படி?

    திமுக எம்.பி கனிமொழியுடன் முதல் அரசியல் நேர்காணல் செய்திருக்கிறேன். தூத்துக்குடியில் உணவுத் திருவிழா நடந்தபோது என்னை அழைத்திருந்தார்கள். அங்கு அவருடன் தனியாக நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

    வித்தியாசமான உணவை ருசி பார்க்கும் (Weird Food Challenge) சவாலை ஒரு அரசியல் தலைவருடன் இணைந்து செய்தது அதுவே முதல்முறை. அவரும் எங்களுக்கு ஒத்துழைத்தார்.

    விளையாட்டாக எடுத்துக்கொண்டு உணவு வகைளை ருசித்தார். இருந்தாலும் நாங்கள் பயந்து கொண்டே அந்த வீடியோவை படம் பிடித்தோம். என்ன இருந்தாலும் அவர்கள் ஓர் அரசியல் தலைவர்தானே. அந்த வீடியோவும் மிக நன்றாக வந்திருந்தது.

    Mohamed Irfan/FB உதயநிதி ஸ்டாலுனுடனான நேர்காணலின்போது...

    அரசியல் தலைவர்களை அணுகும்போது சிலநேரம் பயமாக இருக்கும். காரணம், அவர்கள் என்ன மாதிரியான சூழலில் இருப்பார்கள் எனத் தெரியாது. திமுக இளைஞரணி செயலர் உதயநிதியுடனும் நேர்காணல் அமைந்தது. ஆனால் அது அவர் நடித்த திரைப்படத்தையொட்டி எடுக்கப்பட்டது.

    தேசிய படைப்பாளிகள் விருது விழா குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்லை. எப்படியும் தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்காது எனத் தெரியும். இந்தி பேசும் மக்கள் இந்தியாவில் அதிகம். ஆனால் தமிழ் பேசுவோர் குறைவுதான்.

    அதனால் அதிகம் இந்தி மொழியில் காணொளிகளை தயாரிக்கும் படைப்பாளிகளே இதில் பங்கெடுக்க முடிகிறது. விருதுகளையும் வெல்ல முடிகிறது. இனி வரும் காலங்களில் இது எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

  • ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்திய மண்ணில் சாதிப்பவர், வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்?
  • யூடியூபர்கள் மிகையாகப் பேசுகிறார்கள் எனத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுவது ஏன்? Mohamed Irfan/FB பிரபல யூடியூபர் காலித் உடன்

    நான் நேர்மையாக வேலை செய்வதாக நம்புகிறேன். அவதூறு பரப்புவது எளிது. ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவதும் எளிது. மக்களும் அதைத்தான் விரும்புவார்கள். ஆனால் அதற்காக காலம் காலமாக இயங்கும் உணவு நிறுவனங்கள் குறித்து நொடிப்பொழுதில் தவறாகப் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல.

    ஒரு தவறான செய்தியால் பல பிராண்டுகள் அழிந்து போயிருக்கின்றன. இல்லாததை இருப்பதாகச் சொல்வது பெருந்தவறு. அவர்களின் தொழிலே காணாமல் போய்விடும். உணவகத்திற்குச் சென்று நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே பேசுகிறேன்.

    எந்த வீடியோவை வெளியிட்டாலும் கமென்ட்டில் மக்கள் கருத்துகளை வெளியிடுவார்கள். மக்களுக்குத் தெரியும். எது நல்லது எது கெட்டது என்பதை மக்களும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

    'பகலிலேயே மிரட்டல் வருகிறது'

    இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டிருக்கிறேன். சிலநேரம் விமர்சனங்கள் எழும்போது காயம் அடைந்திருக்கிறேன். வெகுஜன ஊடகங்களுமே செய்திகளைச் சரிபார்க்காமல், அரைகுறையாக வெளியிடும்போது வேதனை அடைந்திருக்கிறேன். யார் செய்தி வெளியிட்டார்களோ அவர்களிடம் பேசியிருக்கிறேன்.

    சிலர் தவறை உணர்ந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி வெளியிட்ட காணொளிகளை நீக்கியிருக்கிறார்கள். சிலர் வாக்குவாதம் செய்வார்கள். சட்ட ரீதியாக ஒரு பிரச்னையை அணுகினால் அதற்காக யார் ஓடிக்கொண்டிருப்பது. பகல் நேரங்களிலேயே மிரட்டல் விடுத்து அழைப்புகள் வருகின்றன.

    'பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்' Mohamed Irfan/FB முகமது இர்ஃபான்

    யூடியூப் காணொளிகளை குழந்தைகளும் அதிகளவில் விரும்பிப் பார்க்கிறார்கள் என்கிறபோது மிகுந்த பொறுப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டியது அவசியம்.

    நம்மைப் பார்க்க வரும் மக்களுக்கு சரியான விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவர்களை ஒருபோதும் தவறாக வழிநடத்தி விடக்கூடாது. நான் பொழுதுபோக்கு காணொளிகளை மட்டுமே வெளியிடுகிறேன்.

    ஆனால் இதற்கே அதிக பொறுப்புணர்வு தேவை என்கிறபோது சிலர் செய்திகள், வரலாறுகள் போன்ற உண்மைச் சம்பவங்களை (Factual) காணொளியாகத் தயாரித்து வெளியிடும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

    (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

    READ ON APP