Hero Image

சோழ, பாண்டிய மன்னர்கள் 1,000 ஆண்டுக்கு முன்பு பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சியை எவ்வாறு சமாளித்தனர்?

Getty Images

கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல்வேறு பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் புயல், மழை, தீ, பூகம்பம் என இயற்கை பேரழிவுகளின் தாக்கம் மிக அதிகம். ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

இதற்கு சமூக வாழிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவைகளே காரணமாகும்.

அறிவியல் முன்னேற்றம் அதிகம் இல்லாத, மன்னராட்சி காலங்களிலும் பஞ்சம், பெருவெள்ளம், பூகம்பம், தீ விபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அப்போது அவற்றை அரசர்கள் எப்படி சமாளித்தார்கள்? குறிப்பாக சோழர், பாண்டியர்கள் ஆட்சியில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் இருந்து அவர்கள் மீண்டு வந்தது எப்படி? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

BBC புயல் காற்று பாதிப்புகள்

இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுக்கள் துறை தலைவரும், துணைக் கண்காணிப்பாளருமான முனைவர் க. பன்னீர்செல்வம், சோழர்- பாண்டியர்கள் காலத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பஞ்சம் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார்.

"இயற்கை சீற்றங்கள் பற்றி தமிழ் இலக்கியங்களும் தமிழ் கல்வெட்டுகளும் மிக அரிதாகவே பதிவு செய்துள்ளன. அதி வேகமாக வீசிய பெரும் புயல் காற்று பற்றி பதிற்றுப்பத்து இலக்கியத்தில்,

'விண்டு நுண்ணிய புயனெடங் காலைக்... கல் சேர்ப்பு மாமழை' என்றும்,

'மாமேகம் பெய்த புயல்..' என்று சீவக சிந்தாமணியும் எடுத்துக் கூறுகின்றது" என்கிறார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

தொடர்ந்து பேசிய அவர், "காற்று என்பது சீரான வேகத்தில் வீசும் வரையில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உகந்ததாகும். அதுவே சற்று வேகமாக பெருங்காற்றாக மாறி வீசும் போது பல்வேறு தாக்குதல்களை சூழலில் ஏற்படுத்துகின்றது."

"காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒரு மணிக்கு 31 -கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அது புயல் காற்றின் முன் அறிகுறியாகும். அதுவே மணிக்கு 32- கிலோமீட்டர் முதல் 52 கிலோமீட்டர் வரை வேகமாக வீசினால் அதற்கு பெயர் சிறு புயல் காற்றாகும். சற்று வேகம் அதிகரித்து 52 முதல் 61 கிலோமீட்டர் வரை வேகத்தில் வீசினால் அது பெரும் புயல் காற்று என்று அழைக்கப்படுகிறது. அது போன்ற பெரும் புயல் காற்றுகள் தற்போது மட்டுமல்ல அந்த காலத்திலும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளன" என்றார் அவர்.

BBC புயலால் உடைந்த ஏரியின் கரைகள்

பாண்டிச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டம் திருக்கஞ்சி என்ற ஊரில் கங்கா வரதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் உள்ள கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்க சோழரின் 40ஆம் ஆட்சி ஆண்டு (கி.பி .1110 மற்றும் 1114) கல்வெட்டுகளில் பெருங்காற்றால் ஏற்பட்ட சேதம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

"முதல் கல்வெட்டில் "திரு புவந சதுர்வேதி மங்கலத்தில் உள்ள நிறை ஏரியானது பெருங்காற்றடித்து குழியடித்து கெட்டுப் போய்..." என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பெருங்காற்றால் ஏரியின் கரைகள் உடைந்து நீர் தேக்கம் கெட்டுப் போனதையும், உடைந்து போனதையும் அறிய முடியும்.

அதேபோல் இரண்டாவது கல்வெட்டில் கங்கைகொண்ட சோழ வளநாட்டில் உள்ள வீர வாதார வளநாட்டில் உள்ள திருபுவன சதுர்வேதி மங்கலத்தில் உள்ள நிறையேரி "பெருங்காற்றடித்து கற்படை இல்லாமல் கரை அழிந்து" என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெருங்காற்று அடித்து கற்படை சுவர் இல்லாததால் ஏரியினுடைய கரைகள் முற்றிலும் அழிந்து போகின்றன. இதனால் அந்த ஏரிக்கு குலோத்துங்கச் சோழர் கற்படை கட்டுவதற்கும் மண்ணால் கரைகளை கட்டுவதற்கும் நிலம் நிவந்தமாக கொடுக்கச் சொல்லி உள்ளதையும் அறிய முடிகிறது.

இதை மன்னரின் திருவாய்மொழிப்படி தாநாகன் என்பவர் நீர் நிலம் மற்றும் கொல்லை- நிலம் முதலியவற்றை மேற்கண்ட பணிக்காக கொடையாக கொடுத்து சீர்படுத்தி உள்ளதை,

"ஸ்வஸ்தி வீர மெய் துணையாக உ என தொடங்கும்.." கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இதைப்போலவே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கிளியனூர் கிராமத்தில் உள்ள கோவிலில் விஜயநகர மன்னர் மல்லிகார்சுனாவின் காலத்தில் கி.பி. 1440 ஆண்டு பிரம்மோத வருஷம் சித்திரை மாத 15ஆம் தேதி பெருங்காற்றும் பெருமழையும் பெய்து பெரிய ஏரியும், பெரிய மதகு மற்றும் சித்தேரி படுக்கை பற்றிலுள்ள ஏரியில் உள்ள நீர் குறைந்து கரை முற்றிலும் உடைந்து போனதையும், அதை சரி செய்து விழுப்பராயார் காங்கேய குமாரர் மகாராசர் என்பவர் மூன்று ஏரிகளையும் சரி செய்து உடைப்புகளை அடைத்து கரைகளை கட்டி செம்மை படுத்தி உள்ளதை

"ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மகா மஜைல சவ ரிநீ ராயவிபாட...." என தொடங்கும் கல்வெட்டு மூலம் அறியலாம்" என்கிறார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

BBC தீ விபத்தால் ஆவணங்கள் அழிந்து போதல்

அதேபோல் கட்டுக்கடங்காத தீ அல்லது பூமியில் ஏற்படும் கடுமையான வெப்ப தாக்குதல் காரணமாகவும் கோவில் கட்டிடப் பகுதிகளும் ஆவணங்களும் எரிந்துள்ளன. விவசாயம் பாதிக்கப்பட்டு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான கல்வெட்டு தஞ்சாவூர் அருகே மயிலாடுதுறை பகுதியில் உள்ள பரசலூர் கிராமத்தில் உள்ள தட்சிணபுரீஸ்வரர் திருக்கோயில் கர்ப்பகிரகத்தின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோச்சடை பன்மாறான திரு புவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டியன் ஐந்தாம் ஆண்டு ஆட்சி ஆண்டு கி.பி. 1256இல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில் நெருப்பால் திருக்கோவிலின் நில ஆவணங்கள் அழிந்துள்ள செய்தியை தெளிவாக பதிவு செய்துள்ளதையும் விவரித்தார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

BBC இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுக்கள் துறை தலைவரும், துணைக் கண்காணிப்பாளருமான முனைவர் க. பன்னீர்செல்வம். விவசாய நிலங்களில் வறட்சியை தாங்கும் மாற்றுப் பயிர்

தொடர்ந்து பேசிய முனைவர் க. பன்னீர்செல்வம், "விக்கிரம சோழன் காலத்தில் மழை இல்லாமல் வானம் பொய்த்து வெப்பம் அதிகரித்ததன் விளைவாக நெல் பயிரிட முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். அதற்கு மாற்று பயிராக வெப்பம் தாங்கி குறைந்த தண்ணீரை பயன்படுத்தி வளரும் மரங்களான கமுகு (பாக்கு) நட்டனர்."

இதை அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணத்தில் உள்ள ஆதி மத்திய ஜுனேஸ்வரர் கோயில் மகா மண்டப சுவரில் உள்ள கல்வெட்டு, விக்கிரமச் சோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1127 -ஆம் ஆண்டில் பெரும் வறட்சி உருவாகியதால் விவசாய நிலத்தை பாக்குத்தோட்டமாக மாற்றி அமைத்ததாகக் குறிப்பிடுகிறது.

"விக்கிரம சோழ வளநாட்டில் உள்ள மண்ணைக் கொண்ட சோழவள நாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தார்கள் ராஜேந்திர சோழ பேராறு வழக்கம்போல் நீர் வராததால் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு இயலாமல் போயியுள்ளது. இதனால் விவசாய நிலங்களில் கமுகு (பாக்கு) பயிர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

"அந்த நிலங்களுக்கு வரி விளக்கு அளிக்க வேண்டும் என்று நகரத்தார்கள் கூடி முடிவு செய்துள்ளதையும் கல்வெட்டு தெளிவாக பதிவு செய்துள்ளது" என்றார் பன்னீர் செல்வம்.

BBC பயிர் செய்தவர்களுக்கே நிலம் சொந்தம்

"இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் இரண்டாம் இராஜராஜ தேவரின் 16 -ஆம் ஆட்சியாண்டு கி.பி. 1162- ஆம் ஆண்டு கல்வெட்டில் பெரும் வறட்சி உருவானதால் விவசாய நிலம் முழுவதும் பாக்குத்தோட்டமாக மாற்றியமைத்ததும் கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கிறார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

மேலும் "கி.பி. 1164 ஆம் ஆண்டு வரையில் பாழ்பட்டு கிடந்த நிலங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு அவர்களின் பெயரிலேயே அந்தந்த நிலங்கள் அரசாங்கத்தின் அடங்கல் கணக்கு புத்தகத்தில் பதிய சொல்லியுள்ளதையும் இந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. இதன் மூலம் அனுபவம் செய்தவர்களுக்கு நிலம் உரிமையுள்ளது என்ற அரசனின் கட்டளையும் அறிந்து கொள்ள முடிகிறது" என்று கூறினார்.

BBC திருவண்ணாமலையில் ஏற்பட்ட பூகம்பம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் தெற்கில் உள்ள 3ஆம் பிரகாரத்தின் தென்பகுதியில், ஐந்தாவது சுற்றுச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பூகம்பத்தை பற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

" பிறபவ வருடம் ஆடி மாதம் 16 உ பூகம்ப

மாகையில் மதிள் அடிமட்டமாக விழுந்

து போகையில் அதிகாரம்

தாத்திரட்டியார் பண்ணுவித்தார்", என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இதில் பிரபவ வருஷம் ஆடி மாதம் 16ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளது. இதனால் இத்திருக்கோவில் உள்ள மதில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனை அதிகாசம் தாத்தி ரெட்டியார் என்பவர் மீண்டும் பூகம்பத்தால் இடிந்த மதில் சுவரை புதிதாக சீரமைத்துகட்டிக் கொடுத்துள்ளதையும் அறிய முடிகிறது" என்றும் அவர் விளக்கினார்.

மேலும், "கோயில் கட்டடத்தில் உள்ள மாறுதல்களை நாம் உற்று நோக்கினால் இது குறித்த அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, அம்மனி அம்மன் கோபுரத்தை ஒட்டிய மதில் சுவரில் இரண்டு விதமான கற்கள் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அடுத்த திருச்சுற்றில், கற்கள் சீரமைத்து வைத்த வேறுபாடுகள் நன்றாக தெரிகிறது. இந்த மதில் சுவரில் சோழர் கால கல்வெட்டு ஒன்று துண்டாக இருக்கிறது. ஜந்தாம் திருச்சுற்றும் ஆறாம் திருச்சுற்றும் இதில் பாதிப்படைந்திருக்கலாம். அதற்கேற்றாற் போல பல வேறுபாடுகள் காணப்படுவதை தற்பொழுதும் நாம் காணலாம்" என்று கூறினார்.

இந்த பூகம்பம் கிபி 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ளது.

BBC வறட்சியால் பஞ்சம் - சோழ, பாண்டிய மன்னர்கள் சமாளித்தது எப்படி?

"விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரை அருகே உள்ள மலையின் பாறை மீது கட்டப்பட்ட அதுல்ய நாதஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோயில் நவராத்திரி மண்டபத்தின் கிழக்கு சுவரில் கி.பி. 1132ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு உள்ளது. அதன் படி, கடும் வறட்சியால் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஊரைவிட்டு சிலர் வெளியேறினர்.

எஞ்சியிருக்கும் மற்றவர்கள் தங்களது விளைச்சலில் 100இல் 24ஐ பங்கிட்டு, பஞ்சம் பிழைக்க வெளியூர் போனவர்கள் மீண்டும் ஊர் திரும்பும் போது கொடுக்க வேண்டும். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட 24 பேர் இதை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஊரைவிட்டுப் போகக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் விளைச்சலில் பங்கு தராதவர்கள் ராஜதண்டமாக 64 கழஞ்சு பொன் தரவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஒன்றரை கழஞ்சு = ஒரு பவுன். எனவே, 64 கழஞ்சு என்பது 43 பவுன்)" என்று விவரித்தார் முனைவர் க. பன்னீர்செல்வம்.

"இதேபோல, கி.பி. 1202இல் மூன்றாம் குலோத்துங்கர் ஆட்சிக்காலத்திலும், கி.பி. 1256இல் முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியரின் ஆட்சியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது, வளநாட்டில் இருந்த கயிலாயமுடைய மகாதேவர்க்கு 540 கழஞ்சு பொன் கொடுத்துள்ளனர்.

இப்பொன்னுக்கு தலா ஒரு கலம் நெல் வீதம் ஆண்டுக்கு 360 கலம் நெல்லை கயிலாயமுடையாருக்கும்,180 கலம் நெல்லை திருவாய்பாடி ஆழ்வாருக்கும் கொடுக்கவேண்டும் என சபையினர் முடிவெடுத்துள்ளனர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன" என்ற தகவலையும் தெரிவித்தார் அவர்.

அதேபோல் கடலூர் அருகே திருவதிகையில் உள்ள சரநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவோத்தூர் வேதபுரீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் வறட்சி, வெள்ளத்தால் ஏற்பட்ட பஞ்சம் குறித்தும், அவற்றை மன்னர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBC பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகள்

தற்பொழுது சுனாமி, புயல் மழையால் பாதித்த மக்களுக்கு அரசாங்கம் தருகின்ற சலுகைகள், உதவிகளை போல் அந்த காலத்திலும் மன்னர்களும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளனர் என்கிறார் முனைவர் க.பன்னீர் செல்வம்.

"அரசர்கள் காலத்தில், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. நிலவரி ரத்து செய்யப்பட்டது, நிலைமையை எதிர்கொள்ள பஞ்சவாரியம் அமைக்கப்பட்டது, ஏரியை சீரமைக்க அதற்கு ஏரி வாரியம் அமைக்கப்பட்டது.

பஞ்சம் ஏற்பட்டாலும் ஊரைவிட்டு மக்கள் வெளியேறக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மீறினால் ராஜதண்டம் விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது" என்று கூறினார் முனைவர் க.பன்னீர் செல்வம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP