Hero Image

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு அடியில் கப்பலை துல்லியமாக செலுத்த மாலுமிகள் என்ன செய்வார்கள்?

BBC

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், கன்டெய்னர் கப்பல் மோதிய விபத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில், ஆற்றில் மூழ்கிய ஆறு பேர் உயிரிழந்தனர்.

பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? மின் சக்தி தீர்ந்தால் அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா?

பாலத்தின் மீது டாலி கப்பல் மோதியது எப்படி?

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து, மார்ச் 26ம் தேதி இரவு இலங்கை கொழும்பு நோக்கி, 300 மீட்டர் நீளமுள்ள டாலி என்ற பெயர் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது.

சற்று நேரத்திலேயே கப்பலின் மின் சக்தி திடீரென இல்லாமல் போன போது, அவசர கால ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். ஆனாலும், கப்பலை இயக்குவதற்கு தேவையான மின் சக்தி அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

இதனால், கப்பலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. துறைமுகம் அருகேயிருந்த ஒரு பாலத்தில் கப்பல் மோதியது. பாலம் இடிந்து படாஸ்கோ ஆற்றில் விழுந்ததால் பாலத்தில் சென்ற கார்களும் ஆற்றில் மூழ்கின. ஆற்றில் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆறு பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன? கப்பல்களின் இயக்கம் மற்றும் அவசர காலங்களில் என்னென்ன செய்வார்கள் என, பிபிசி தமிழிடம் முன்னாள் கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

Getty Images கப்பலை இயக்குவது எப்படி?

கப்பல்களை இயக்குவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரக்கு கப்பலின் முன்னாள் கேப்டன் குமார் மற்றும் மாலுமி மதன் பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தனர்.

‘‘கப்பல்களில் பல வகைகள் உள்ளன. நிலக்கரி, விவசாய உரங்கள் எடுத்துச் செல்லும் சரக்கு கப்பல், ஆயில் டேங்கர், கன்டெய்னர் எடுத்துச் செல்லும் கப்பல் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் குரூயிஸ் கப்பல் என பல வகைகள் உள்ளன. சரக்கு கப்பலை பொருத்தவரையில், 70 முதல் 400 மீட்டர் நீளம் அளவிற்கு உள்ளன. இதில், நீளத்தை பொறுத்து, 20 முதல் ஆயிரம் பேர் வரையில் பணியாற்றுவார்கள்.

இயக்கத்தை பொருத்தவரையில், கேப்டன் தான் கப்பலின் நேவிகேஷன் எனப்படும் கப்பலை வழிநடத்தும் பணியை செய்பவர். இவருக்கு அடுத்தபடியாக தலைமை பொறியாளர் (Chief Engineer) கப்பலின் இயந்திரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்,’’ என்கின்றனர்.

கடலில் எங்கு எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பதை தெரிவிக்க பிரத்யேக வரைபடம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Getty Images

‘‘இந்திய கப்பல்களுக்கு தனியாக இந்திய வழிகாட்டி வரைபடம் (Navigation Map) உள்ளது. அதேசமயம் பிரிட்டிஷ் கப்பல்கள் உலக அளவிலான தகவல்கள் அடங்கிய வரைபடத்தை கொண்டுள்ளது.

இதில், எந்தப் பகுதியில் எத்தனை ஆழம் உள்ளது, கப்பல் தரைதட்டும் வாய்ப்பு உள்ளதா? எந்ததெந்த துறைமுகங்கள் அருகே பாலங்கள் உள்ளன, அதன் உயரம் என்ன, குறுகலான கால்வாய்கள் எவை என அனைத்து தகவல்களும் அந்த டிஜிட்டல் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதைக்கொண்டு தான் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், அனைத்து கப்பல்களும், விமானங்களைப் போல அருகேயுள்ள துறைமுகங்களில் தகவல்கள் கொடுக்க வேண்டும், அவர்கள் நம்மை ஜிபிஎஸ் வாயிலாக கண்காணிப்பார்கள். அவசர காலத்தில் தகவல் கொடுத்தால் துறைமுகத்தில் இருந்து உதவி செய்வார்கள்,’’ என்று கேப்டன் குமார் கூறினார்.

அவசர காலத்தில் தகவல் தொடர்பு எப்படி சாத்தியம்? Getty Images

கப்பல்களில் மின் சக்தி தீர்ந்தால் என்னவாகும்? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.

அதற்கு பதிலளித்த அவர்கள், ‘‘கப்பல்களை பொருத்தவரையில் மின் சக்திக்காக மூன்று வசதிகள் உள்ளன. கப்பல்களில் முதன்மை எரிபொருளாக டீசல் அல்லது Heavy Fuel Oil அல்லது Low Sulfur Fuel Oil ஆகிய மூன்று வகை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவைதான் முதன்மை எரிபொருள்.

கப்பல்களில் இந்த முதன்மை சக்தி தீர்ந்து போனால், அவசர காலத்திற்காக ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருக்கும். மூன்றாவதாக, கப்பல் இயங்காமல் போனாலும் தகவல் பரிமாற்றத்திற்காக பேட்டரிகள் இருக்கும்.

கப்பல் இயக்கத்திற்கான உந்துவிசைக்காக Propeller எனப்படும் உந்துவிசை காற்றாடியும், திசையை மாற்றுவதற்கு Rudder என்ற கருவியும் ஜெனரேட்டர்களை வைத்து இயக்க முடியும்.

முதன்மை மின் சக்தியுடன் ஜெனரேட்டரும் செயலிழந்து போனால் நம்மால் கப்பலை கட்டுப்படுத்த முடியாது, அதன் திசையையும் மாற்ற முடியாது, பேட்டரியை வைத்து தகவல் தொடர்பை மட்டுமே பயன்படுத்த முடியும்,’’ என்றனர்.

நங்கூரத்தை கொண்டு உடனடியாக கப்பலை நிறுத்த முடியுமா? Getty Images

மின் சக்தி தீர்ந்துபோனால் கப்பலை நங்கூரம் கொண்டு நிறுத்துவதும் மிகவும் கடினம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கப்பல்களின் வேகத்தை நாட் – (Knot – Nautical Mile) என்ற அளவீட்டின் மூலம் அளக்கப்படுகிறது. கப்பலின் வேகத்தை பொறுத்து தான் நங்கூரம் பயன்படும். ஒரு பெரிய சரக்கு கப்பல் 2 – 4 நாட் வேகத்தில் சென்றாலே, நங்கூரத்தை வைத்து நிறுத்துவது கடினம்.

வேகம் அதிகமாக இருக்கும் போது நங்கூரத்தை பயன்படுத்தினால் நங்கூரத்தின் சங்கிலி அறுந்து பயனற்றுப்போகும். அத்துடன், கப்பலில் நங்கூரம் பொருத்தப்பட்ட பகுதியே பெரும் சேதத்திற்குள்ளாகும். இதனால், வேகத்தை பொறுத்தே நங்கூரத்தின் மூலம் கப்பலை நிறுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பன் பாலத்திற்கு அடியில் கப்பலை செலுத்த மாலுமிகள் என்ன செய்வார்கள்? Getty Images

சரக்கு போக்குவரத்து பயணத்தில் சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன பல முக்கியமான கால்வாய்கள் உலகெங்கிலும் உள்ளன.

இரண்டு முக்கியமான கடல்களை அல்லது வழித்தடங்களை இணைக்க இந்த குறுகலான கால்வாய்கள் பயன்படுகின்றன.

ஆனால் சூயஸ், பனாமா போன்ற குறுகலான கால்வாய் மற்றும் பால்டிமோர், பாம்பன் போன்ற பாலங்களை கப்பல் கடந்து செல்லும் போது குறைவான இடத்தில் அதிக துல்லியத்துடன் கப்பலை இயக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சிக்கலான பகுதிகளை கப்பல்கள் எப்படி கடக்கிறது என்பதை கப்பலில் பணிபுரியும் மாலுமியான மதன் விளக்கினார்.

கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து நீருக்கடியில் கப்பல் எவ்வளவு ஆழத்திற்கு உள்ளது என்பதை Draft அல்லது Draught எனவும், கடல் நீரின் மேற்பரப்பிலிருந்து கப்பல் எவ்வளவு உயரத்திற்கு உள்ளது என்பதை Air Draft என்ற அளவீடுகள் மூலம் அளக்கப்படுகிறது.

கப்பல்கள் துறைமுகத்தை அடைந்ததும், அங்குள்ள பாலங்களை அந்த கப்பல் கடக்க முடியுமா முடியாதா என்பதை Draft அளவீடுகளை வைத்து தீர்மானித்த பின் தான், பாலத்தை கடக்க அனுமதியே வழங்கப்படும். அதேபோல், கப்பலின் நீளத்தை பொறுத்து தான் குறுகிய கால்வாய்களை கடக்க அனுமதி அளிக்கப்படும்.

பாலத்தையும், குறுகலான கால்வாய் பகுதிகளையும் கடக்கும் போது, அந்தந்த துறைமுகத்தை சேர்ந்த வழிகாட்டுதல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற பைலட் ஒருவர் நமது கப்பலில் வந்து கேப்டனுக்கு வழிகாட்டுவார். அப்போது, மிக எளிதாக பாலத்தையோ, கால்வாய்களையோ கடக்க முடியும் என்றார்.

பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன? Getty Images

அமெரிக்காவில் கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான சில பொதுவான காரணங்களையும் குறிப்பிடுகிறார் சரக்கு கப்பல் கேப்டன் குமார்.

இது குறித்து பேசிய அவர், ‘‘அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டதற்கான முழுமையாக காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், விபத்திற்கான சில சாத்தியக்கூறுகளை நாம் உணர முடிகிறது.

Air Draft அளவீட்டின் படி அந்தப் பாலத்தை கடக்க அக்கப்பல் அனுமதி பெற்று லோக்கல் பைலட் உடன் பயணித்த போது, முதன்மை மின் சக்தி இல்லாமல் போனது. அப்போது, ஜெனரேட்டரின் சக்தி இஞ்ஜினின் இயக்கத்திற்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட வேகத்தில் வந்த அந்தக் கப்பலின் Propeller மற்றும் Rudder கருவியை இயக்க முடியாமல், கப்பலின் திசையை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். நங்கூரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டோ அல்லது நங்கூரம் பயன்படாத நிலை ஏற்பட்டு தான், பாலத்தின் உயரம் குறைவான பகுதியில் கப்பல் மோதியிருக்க வேண்டும். விபத்தின் வீடியோக்களை பார்க்கும் போது, இந்த பொதுவான காரணங்களை நாம் உணர முடிகிறது. இவை விபத்திற்கான சாத்தியக்கூறுகளாக இருந்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

READ ON APP