Hero Image

இது தெரியுமா ? ஒரு கைப்பிடி அறுகம்புல் மூன்று மிளகு ஒரு வெற்றிலை இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து...


உடலில் சேர்ந்த அசுத்தங்களை வெளியேற்ற அறுகம் புல் சிறந்த மருந்து. அறுகம் புல்லை இடித்து சாறு பிழிந்து, நீர் சேர்த்து சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு கூட்டி தினமும் அரை டம்ளர் குடித்து வர, உங்கள் உடம்பில் உள்ள கெட்ட நச்சுப் பொருள்கள் எல்லாம் `பூனையைக் கண்ட எலியைப் போல’ திரும்பிப் பார்க்காமல் தெறித்து ஓடும். ஆடு, மாடுகள் எல்லாம் புல் வெளிகளில் பசுமையான புற்களை உற்சாகமாக மேய்ந்துவிட்டு ஆரோக்கியமாக இருப்பதோடு, நமக்காக சத்தான பாலையும் உற்சாகமாக வழங்குகின்றன.

விலங்கினங்களின் குணாதிசயங் களையும் கூர்ந்து கவனியுங்கள்.

சருமத்தில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்ற நோய்களைப் போக்க, அறுகம்புல் சாற்றைக் குடித்து வரலாம். அதுமட்டுமல்லாமல், அறுகம் புல்லை மஞ்சளோடு சேர்த்து அரைத்து நோய் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசி வர, சொறியும் சிரங்கும் நம் கண்ணுக்குத் தெரியாத இடத்துக்குச் சென்று மறைந்துகொள்ளும் அறுகம் புல், சரும நோய்களுக்கான சிறந்த மருந்து!

நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள், தங்கள் உடம்பில் சிறிதாக அடிபட்டு ரத்தம் வடிந்தால், உடனடியாக அறுகம் புல்லைக் கசக்கித் தேய்ப்பதுண்டு! அறுகம் புல்லுக்கு ரத்தப்பெருக்கைத் தடுக்கும் தன்மை இருப்பதால், அடிபட்டு ரத்தம் வடியும்போது, உடனடியாக அறுகம் புல்லை கசக்கித் தேய்க்கும் வழக்கம் கிராமங்களில் இப்போதும் உண்டு. 

ஒரு கைப்பிடி அறுகம்புல், மூன்று மிளகு, ஒரு வெற்றிலை இவற்றை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, குடிநீராகக் காய்ச்சி வடிகட்டி அருந்த, விஷங்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, நம் ரத்தத்தையும் சுத்தி செய்யும். மலைப்பகுதியில் வசிக்கும் சில இன மக்கள், பூச்சி, தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடிக்கும் போது, மேற்சொன்ன அறுகன் குடிநீரையே அதிகம் பயன்படுத்து கின்றனர். மாதம் ஒருமுறையாவது இந்த அறுகன் குடிநீரை எடுத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் வயிற்றுக்குள் குறுகுறுவென நடனமாடும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, வயிறு மற்றும் குடல் பகுதியை சுத்தம் செய்யவும் அறுகன் குடிநீர் பயன்படும். நாய்களுக்கும் பூனைகளுக்கும் செரிமானம் தொடர்பான பிரச்னைகள் வரும் போது, அருகம் புல்லை சாப்பிட்டு சரி செய்துகொள்வதாக ஒரு செய்தி உண்டு. அம்மை நோய் வந்து குணமான பின்பு, தலைக்கு நீர் ஊற்றும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அந்த நீரில் அறுகம் புல்லையும், வேப்ப இலைகளையும் போட்டுக் காய்ச்சித் தலைக்குக் குளிப்பதால், அம்மை நோய் மீண்டும் வராது என்பது கிராமத்து மருத்துவ உத்தி.

அறுகம் புல் சாற்றை அருந்துவதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் உடல் எடையையும் சீராகப் பராமரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இனிமேல் உடல் எடை அதிகரித்து இருப்பவர்களைப் பார்த்தால், அறுகம் புல் சாற்றை குடிக்கச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். கூடவே நல்ல உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இருந்தால் எளிதாக உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற சூட்சுமத்தை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

READ ON APP