Hero Image

இது என்ன நியாயம் ? அமைச்சர்களுக்கு புது கார்.. மக்களுக்கு பழைய பஸ்ஸா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!


அரசு பேருந்தில் நடத்துனர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்தது. இருக்கையுடன் நடத்துனரும் படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஓட்டை வழியாக பெண் பயணி சாலையில் விழுந்து காயமடைந்தார்.

இந்த அதிர்ச்சி விலகும் முன்பே திருச்சி பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்து டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.

தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது என்று விமர்சித்த அன்புமணி, “20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன” என்று விவரித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்ற அவர், புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலைக்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான கார்கள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதல்வரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்குகிறார்கள். ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?” என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.


 

READ ON APP