Hero Image

பிரபல தாதா முக்தர் அன்சாரி சிறைச்சாலையில் திடீர் மரணம்..!


பிரபல தாதா முக்தர் அன்சாரி மரணமடைந்தார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் "மெல்லக் கொல்லும் விஷம்" (ஸ்லோ பாய்சன்) மூலம் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக அவர் பணியாற்றி உள்ளார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.

63 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர் வசம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் அவருக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு 8.25 மணி அளவில் பாண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறையில் இருந்த முக்தார் அன்சாரி கொண்டு வரப்பட்டார். அவரை சிறைச்சாலை ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். நோயாளிக்கு 9 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தும் நோயாளி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், "ஸ்லோ பாய்சன்" என்று அழைக்கப்படும் மெல்லக் கொல்லும் விஷம் மூலம் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இதுகுறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "முக்தர் அன்சாரியின் மறைவு குறித்த துயரமான செய்தி கிடைத்துள்ளது. அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவருடைய இழப்பை தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

READ ON APP