Hero Image

IPL : நரைன் ஓவரில் இத்தனை வருசமா நடக்காத விஷயம்.. மனுஷன் உண்மையாவே லெஜண்ட் தான் போல..

ஐபிஎல் தொடரிலேயே ஒவ்வொரு அணிக்கும் சில வீரர்கள் சொத்தாக இருந்து வருவதுடன் பல ஆண்டுகளாக அந்த அணி சிறந்து விளங்குவதற்கும் காரணமாக அவர்கள் இருப்பார்கள். சென்னைக்கு எப்படி தோனி, ஜடேஜாவோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படி ரோஹித் ஷர்மாவோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எப்படி விராட் கோலியோ அதே போல கொல்கத்தா அணியின் மிகப்பெரிய சொத்தாக இருந்து வருபவர் தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.

சுழற்பந்து வீச்சாளரான இவர் பவுலிங்கில் மட்டுமில்லாமல் கம்பீரின் வழிகாட்டுதலின் படி பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பி வரும் சூழலில், பல போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து ரன்கள் அதிகம் சேரவும் வழிவகுத்து வருகிறார்.

மேலும் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக எதிரணி வீரர்கள் இருந்தாலும் தனது சுழற் பந்தால் மிகச் சிறப்பாக கையாண்டு ரன்களை கொடுக்காமல் கட்டுப்படுத்துவதிலும் வல்லவராக இருந்து வரும் சுனில் நரைன், சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் தனது முதல் டி 20 சதத்தை எடுத்திருந்தார்.

இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணி, இலக்கை எட்டி வெற்றி பெற்றிருந்தாலும் நரைன் சாதனை நிச்சயம் மிகப்பெரிய விஷயம் தான். அவரது அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியின் சர்வதேச தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்த்து ரன் சேர்க்க தடுமாறினாலும் சுனில் நரைன் தனியாளாக போராடி ரன் சேர்த்தபடி இருந்தார்.

அதே போட்டியில் பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்த சுனில் நரைன் ஒரு கேட்சையும் பிடித்திருந்தார். இப்படி கொல்கத்தா அணிக்கு பல வழிகளில் ஆபத்பாந்தவனாக இருந்து வரும் சுனில் நரைன், ஐபிஎல் தொடரில் இதுவரை செய்துள்ள ஒரு முக்கியமான சாதனை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

மொத்தமாக 168 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள சுனில் நரைன், ஒரு போட்டியிலும் கூட தனது பந்து வீச்சு மூலம் தனது நான்கு ஓவர்களில் ஐம்பது ரன்களுக்கு மேல் கொடுத்ததே கிடையாது. ஐபிஎல் தொடரில் அவரது ஓவரை எதிர்த்து எத்தனையோ அதிரடி ஜாம்பவான்கள் ஆடியுள்ளார்கள்.

அப்படி இருந்தும் புதிதாக அறிமுகமாகும் இளம் பந்து வீச்சாளர்கள் கூட ஒரு சில போட்டிகளிலேயே 50 ரன்களை வாரி வழங்கும் சூழலில் இத்தனை நாட்களாக அவரது பந்து வீச்சில் எந்த அணியும் 50 ரன்கள் தொடவில்லை என்ற தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

READ ON APP