Hero Image

பெளர்ணமியில் வரும் சந்திர கிரகணம்...திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சரியான நேரம் எது?

ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் உள்ள கிரிவல பாதையில் மொத்தம் 99 கோவில்கள் உள்ளன. இங்கு குளங்கள், ஜீவ சமாதிகள், அஷ்டலிங்கம் என அற்புத பலன்களை அள்ளி தரும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. பெளர்ணமி அன்று சித்தர்களும், தேவர்களும் கூட திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக நம்பப்படுவதால் அந்த நாளில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் :

பெளர்ணமி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். திருவண்ணாமலையில் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும், பெளர்ணமி கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாகும். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கூடுவதுண்டு. திருவண்ணாமலை கிரிவலம் செல்வது பாவங்களை போக்கி, அனைத்து விதமான நலன்களையும் தரக் கூடியது. வாழும் போது துன்பம் இல்லாத வாழ்வையும், வாழ்க்கைக்கு பிறகு சிவலோக பதவியும் கிடைக்க செய்வது திருவண்ணாமலை கிரிவலம்.


மார்ச் 2024 கிரிவல நேரம் :

மார்ச் மாத பெளர்ணமி மார்ச் 24 ம் தேதி காலை துவங்கி, மார்ச் 25ம் தேதி வரை உள்ளது. மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணி துவங்கி, மார்ச் 25ம் தேதி பகல் 01.16 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதனால் இந்த நேரமே திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி கிரிவலம் செல்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் மார்ச் 25ம் தேதி பங்குனி உத்திரம் என்பதால் அன்று கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி காலை 10.05 மணி துவங்கி, பகல் 03.02 வரை சந்திர கிரகணம் நிகழ போகிறது. இது 2024ம் ஆண்டின் முதல் கிரகணம் ஆகும்.


சந்திர கிரகணத்தில் கிரிவலம் செல்லலாமா?

பங்குனி உத்திரம், பெளர்ணமி வரும் மார்ச் 25ல் சந்திர கிரகணமும் இணைந்து வருவதால் கிரகண நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா? அல்லது அன்றைய தினம் கிரிவலம் செல்வதற்கு ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? என்பது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் சந்திர கிரகணம் நடைபெறுவதால் கிரிவலத்தில் மாற்றம் உள்ளது பற்றி இதுவரை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பங்குனி மாத பெளர்ணமி 2024 : ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டமான நாள் இது தானாம்...ஏன் தெரியுமா?


பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகணம் :

பங்குனி உத்திரம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். பெளர்ணமி, பங்குனி உத்திரம், சந்திர கிரகணம் ஆகியவை ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் விசேஷமாகும். அதுவும் சந்திரனுக்குரிய திங்கட்கிழமையில் இவை அனைத்தும் இணைந்து வருவது மிகவும் அற்புதமானதாகும். இதனால் இந்த நாளில் தாராளமாக கிரிவலம் செல்லலாம் என்பது தான் விபரம் அறிந்த ஆன்மிக பெரியவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. கிரகண நேரத்தின் போது கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். இதனால் சுவாமி தரிசனம் தான் செய்ய முடியாதே தவிர கிரிவலம் செல்வதற்கு எந்த தடையோ கட்டுப்பாடோ கிடையாது.


கிரகண நேரத்தில் கிரிவலம் :

சந்திர கிரகண நேரத்தில் பெளர்ணமி கிரிவலம் வருவதாலும், இறை சிந்தனையில் இணைந்திருப்பதாலும் அந்த சமயத்தில் பக்தர்கள் செய்யும் வழிபாட்டிற்கு பலமடங்கு அதிகமான பலன் கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது. தெய்வீக ஆற்றல் அதிகரித்து, தெய்வங்களின் தங்களின் இறைசக்தியை புதுப்பித்துக் கொள்ளும் காலம் என்பதால் கிரகணம் காலத்தில் செய்யப்படும் வேண்டுதல்களை, இறைவழிபாட்டினை தெய்வங்கள் நேரடியாக ஏற்பதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் தாராளமாக கிரிவலம் செல்லலாம் என சொல்லப்படுகிறது.

READ ON APP