Hero Image

`வாஜ்பாய், அத்வானி... ஏன் நீங்களே அதைச் செய்திருக்கிறீர்கள்!' - மோடிக்கு கார்கே பதில்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதியில் போட்டியிட்டார். இதில், அமேதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ராகுல் காந்தி, வயநாட்டில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை, வயநாட்டில் முதலாவதாக வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி, மீண்டும் அமேதியில் போட்டியிடுவாரா என்று கேள்வியெழுந்தது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

இத்தகைய சூழலில், தன்னுடைய தாய் சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி-யான பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படாமலிருந்த ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், பா.ஜ.க தலைவர்கள் பலரும் வயநாட்டில் தோல்வியடைந்துவிடுவோம் என்று பயந்த ராகுல் காந்தி, அமேதியில் போட்டியிடவும் பயந்து ரேபரேலிக்கு சென்றிருக்கிறார் என விமர்சித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி கூட, ``ராகுல் காந்தி, வயநாட்டில் வாக்குப் பதிவு முடிந்ததும் தான் போட்டியிட வேறு தொகுதி தேடுவார் என்று முன்பு கூறியிருந்தேன். அதேபோல, தற்போது அமேதி தொகுதிக்குப் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார்" என்று மேற்கு வங்கத்தில் நேற்று கூறியிருந்தார்.

மோடி

இந்த நிலையில், அத்வானி, வாஜ்பாய் உட்பட மோடியும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், இந்தியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பதில் விமர்சனம் செய்திருக்கிறார். ராகுல் காந்தி மீதான மோடியின் விமர்சனத்துக்கு ஊடகத்திடம் எதிர்வினையாற்றியிருக்கும் கார்கே, ``சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களை அவர் பேசுகிறார். தனது கண்ணியத்தை இழந்து இவ்வாறு செய்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

இதற்குப் பதில்சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. யார் இங்கு பயப்படுகிறார்கள்... அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடவில்லையா... மோடியும் இதைச் செய்திருக்கிறார்" என்று கூறினார்.

கார்கேவின் கூற்றுப்படி, அத்வானி 1991 நாடாளுமன்றத் தேர்தலில் காந்தி நகர், புது டெல்லி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கும் எம்.பி-யாக இருக்க முடியாது என்ற சட்ட விதிப்படி, புது டெல்லி தொகுதி எம்.பி பதவியை அத்வானி ராஜினாமா செய்தார். அதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1957 மற்றும் 1962 தேர்தல்களில் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்.

அத்வானி, வாஜ்பாய்

மேலும், பிரதமர் மோடி 2014-ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியபோது குஜராத்தில் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிபெற்ற மோடி, வதோதரா தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2019 தேர்தலில் மீண்டும் வாரணாசியில் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி, இந்தத் தேர்தலிலும் வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Raebareli: முதல் பெண் பிரதமரை அளித்த ரேபரேலியில் `ராகுல் காந்தி'... வரலாறும், கள நிலவரமும்!

READ ON APP