தமிழகத்தல் கோல்ட்ரிஃப் மருந்துக்குத் தடை... 6 குழந்தைகள் பலி; குடித்துப் பார்த்த மருத்துவரும் மயக்கம்!
மத்தியப் பிதேச மாநிலத்தில் இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த நிலையில் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருமல் மருந்து அவர்களின் உயிரிழந்ததற்கு காரணம் கிடையாது. இந்த மருந்து பாதுகாப்பானது தான் என்று குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிய மருத்துவர், மருந்தைக் குடித்துக் காட்டிய நிலையில் மருத்துவரும் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருவது பரபரப்பானது. இந்நிலையில் கோல்ட்ரிஃப் சிரப் தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1-7 வயதுக்கு உட்பட 6 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தன. உயிரிழந்த அனைத்து குழந்தைகளுக்கும் சிறுநீரகம் செயழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழந்தைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான். குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, சிறுநீரக திசுவில் 'டைஎத்தீலின் கிளைசால்' எனும் ரசாயன பொருள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படும் இந்த ரசாயனம் இருமல் மருந்தில் கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தைகளின் பிரேத பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா எனும் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த இருமல் சிரப், உற்பத்தி செய்யப்படுகிறது. இதனையடுத்து இந்த மருத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ்குமார் மௌரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "ஃபினைலெஃப்ரின் ஹெல், குளோர்பெனிரமைன் மல்கேட் சிரப் (கோல்ட்ரிஃப்) ஆகிய மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இந்த ஆண்டு மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட SR-13 என்ற தொகுப்பு எண் கொண்டதாகும். இந்த மருந்தின் காலாவதி தேதி 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதமாகும்.
இந்த மருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனம் உங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பதால், இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும், வழங்கப்பட்ட மருந்து பற்றிய விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இருமல் சிரப்களில் 'டைஎத்திலீன் கிளைகோல்' என்ற நச்சுப் பொருள் கலந்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், மத்திய சுகாதார அமைச்சகம், பல துறைகளை உள்ளடக்கிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் இந்த மருத்து விற்பனைக்கு தற்போது தடை பிறக்கப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் கோல்ட்ரிஃப் சிரப் விற்பனையைத் தடுக்கவும், இருப்பு உள்ள இடங்களில் அவற்றின் விற்பனையை தடுக்கவும் மருந்து ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டுத் துணை இயக்குநர் எஸ். குருபாரதி தெரிவித்தார். அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.