கிருஷ்ணர் வேடமிட்டு கதகளி அரங்கேற்றம் செய்த இஸ்லாமிய பெண் - கேரளாவில் புதிய வரலாறு
''இன்று என் கனவு நனவாகியிருக்கிறது. அரங்கேற்றத்தின்போது எனக்கு எவ்வித அச்சமும் ஏற்படவில்லை. மாறாக நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன். அதை என்னால் விவரிக்க இயலாது. ஆனால் இன்னும் நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. கதகளி கலையில் ஒரு முக்கியக் கலைஞராக உருவெடுக்க வேண்டும். அதற்காக நான் இன்னும் நிறைய கற்கவும் தயாராயிருக்கிறேன்!''
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள 95 ஆண்டு பழமையான கலா மண்டலத்தில் அக்டோபர் 2-ஆம் தேதியன்று விஜயதசமி நாளில் நடந்த கதகளி அரங்கேற்றத்தில் கிருஷ்ண வேஷத்தில் பங்கேற்ற இஸ்லாமிய சிறுமி சப்ரி, பிபிசியிடம் கூறிய வார்த்தைகள் இவை.
கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலையான கதகளியை கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்துள்ள முதல் இஸ்லாமியச் சிறுமியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் சப்ரி.
அதேநேரத்தில் இதற்கு சில பகுதிகளிலிருந்து விமர்சனங்களும் வந்திருப்பதாகக் கூறும் சப்ரியின் தந்தை நிஜாம் அம்மாஸ், அவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.
கதகளி கலைஞராக உருவெடுக்க வேண்டுமென்ற தன் மகளின் கனவுக்கு உறுதியாக துணை நிற்கப் போவதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூரில் இருக்கிறது கேரள கலாமண்டலம். இது கேரள மாநிலத்தின் பழமையும், பாரம்பரியமும் மிக்க கலைகளான கதகளி, மோகினியாட்டம், குடியாட்டம், துள்ளல், குச்சிப்புடி, பரதநாட்டியம், நங்கையர் கூத்து போன்ற நடனக்கலைகளையும், பஞ்சவாத்தியம் போன்ற இசை வடிவங்களையும், இலக்கியம், கட்டடக்கலை போன்றவற்றையும் கற்றுத்தரும் கல்வி நிலையமாகவுள்ளது.
கடந்த 1930 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த கல்வி நிலையம், தற்போது 95-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட கேரள கலாமண்டலம், முதல் வகுப்பிலிருந்து முதுகலை வரையிலான கேரள அரசு பாடத்திட்டங்களையும் கற்றுத்தருகிறது.
தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் கல்வியுடன் சேர்த்து இந்த கலைகளைக் கற்பதற்கு 600 மாணவர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களில் 300க்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்றும் கலா மண்டலப்பதிவாளர் ராஜேஷ்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
இங்கே பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகளில், கேரளா முழுவதும் ஒட்டுமொத்தமாக கவனத்தை ஈர்த்திருக்கிறார் 10 ஆம் வகுப்பு மாணவி சப்ரி (வயது 16). அவர்தான் கேரள கலா மண்டலத்தில் கதகளி கலையை கற்பதற்காகச் சேர்ந்த முதல் இஸ்லாமிய மாணவி.
காலம்காலமாக ஆண் கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்த கதகளி கலையை பெண்களும் கற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது 2021-ஆம் ஆண்டில்தான். அதற்குப் பின்பே கேரள கலா மண்டலத்தில் கதகளி கற்க பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
''கதகளியில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வரும் விதமாக பிரபல கதகளி கலைஞர் கலா மண்டலம் கோபிதான் இதை முன் மொழிந்தார். அதன்பின் கடந்த 2021–2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக கலா மண்டலத்தில் கதகளி கற்பதற்கு பெண்களுக்கான சேர்க்கை துவக்கப்பட்டது. அதில் சேர்ந்த முதல் இஸ்லாமிய மாணவி சப்ரி. அவருடைய அரங்கேற்றம் இப்போது நல்லவிதமாக நடந்திருப்பதில் கலா மண்டலத்தைச் சேர்ந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் பெருமகிழ்ச்சி!'' என்றார் பதிவாளர் ராஜேஷ்குமார்.
கேரள கலா மண்டலத்தில் தற்போது பத்தாம் வகுப்புப் படிக்கும் சப்ரி, கடந்த 2023-ஆம் ஆண்டில் இங்கு கதகளி கற்பதற்காகச் சேர்ந்த முதல் இஸ்லாமிய மாணவி.
கதகளி கற்பதற்கு பெண்களைச் சேர்ப்பதாக கலா மண்டலம் முடிவெடுத்த முதல் ஆண்டில் மாணவியர் சேர்க்கை எதுவும் இல்லை. அடுத்த ஆண்டில் சில பெண்கள் சேர்ந்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டில் தேக்கன் கதகளி பிரிவில் சேர்ந்த ஏழு மாணவிகளில் சப்ரியும் ஒருவர். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்து மாணவிகள்.
சப்ரியின் தந்தை நிஜாம் அம்மாஸ், அடிப்படையில் ஒரு புகைப்படக்கலைஞர். கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்திலுள்ள அஞ்சல் என்ற கிராமம்தான் நிஜாமின் சொந்த ஊர். அங்கேயிருக்கும் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவின்போது நடக்கும் கதகளி நிகழ்ச்சிகளை நிஜாம் படமெடுப்பார். அப்போது அவருடன் சிறு குழந்தையாக வேடிக்கை பார்க்கச் செல்வார் சப்ரி.
''அப்போதிலிருந்தே கதகளி புகைப்படங்களையும், கதகளி நடனக்கலைஞர்களையும் சப்ரி வெகுவாக ரசிப்பாள். அந்த கலைஞர்களின் பல வண்ண ஒப்பனை, ஆடை அலங்காரம், அவர்களின் கண்ணசைவு, முகபாவங்களை மிக உன்னிப்பாகக் கவனிப்பாள். அதில் அவளுக்கு அப்போதே ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதை நானும் கற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்பாள். எங்கள் ஊருக்கு அருகில் ஆரோமல் என்ற கதகளி கலைஞர் இருந்தார். அவர்தான் சப்ரிக்கு முதல் முறையாக இதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் முறைப்படி கதகளி கற்பதற்கான சூழல் அமையவில்லை!'' என்று பிபிசியிடம் தெரிவித்தார் நிஜாம்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் கேரள கலா மண்டலத்தில் கதகளிக்கு பெண்களுக்கான சேர்க்கை துவங்கியபோதுதான் அவளுடைய கனவு நனவாவதற்கான முதல் கதவு திறக்கப்பட்டதாகக் கூறும் நிஜாம் அம்மாஸ், தன்னுடைய மனைவி அனீசாவும், தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார்.
இவர்களிருவரும் முடிவெடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் சப்ரியைச் சேர்த்தனர்.
அதனால் கலா மண்டலத்தின் கதகளி இரண்டாவது பேட்ஜில் சேர்ந்து அதைக் கற்கும் வாய்ப்பு சப்ரிக்கு சாத்தியமானது. இப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் சப்ரி, கடந்த 2 ஆண்டுகள் கற்றதன் அடிப்படையில் அக்டோபர் 2- ஆம் தேதியன்று விஜயதசமி நாளில் கேரள கலா மண்டலத்தின் கூத்தம்பலத்தில் (அரங்கேற்ற மேடை) நடந்த 'ராமாயணா' கதை சொல்லல் நிகழ்வில் கிருஷ்ண வேஷமிட்டு தனது கதகளியை அரங்கேற்றியுள்ளார்.
அன்று அவருடன் சேர்ந்து 5 பேர் அரங்கேற்றம் செய்ததில் மற்ற நால்வரும் இந்துக்கள்.
ஓர் இஸ்லாமிய மாணவி, விஜயதசமி நாளில் கிருஷ்ண வேஷமிட்டு, கதகளியை அரங்கேற்றியது, கேரள ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது. இதனால் ஒரே நாளில் கேரளாவிலும், கேரளாவைக் கடந்து பிற மாநிலங்களிலும் இந்த கதகளி அரங்கேற்றம் பேசுபொருளாகி, பிரபலமாகியிருக்கிறார் சப்ரி.
கதகளி கற்பதற்கு சேரும் அனைவருக்குமே, பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடப்பது வழக்கம்.
சப்ரியும் இதில் தேர்ச்சி பெற்றே கதகளி கற்பதற்குச் சேர்ந்து, தற்போது அரங்கேற்றம் நிகழ்த்தியிருக்கிறார். அவருக்கு முதல் முதலாக கதகளி முத்ராக்களை பிரபல கதகளி கலைஞர் கலா மண்டலம் கோபிதான் கற்றுத்தந்ததாகச் சொல்கிறார்கள் கலா மண்டல நிர்வாகிகள். அதன்பின்பு அனில்குமார் மற்றும் அவருடைய சகாக்களிடம் இதற்கான பயிற்சியை அவர் எடுத்து வருகிறார்.
அரங்கேற்றம் நடந்த விஜயதசமி நாளில் காலை 11 மணிக்கு, சப்ரி உட்பட அரங்கேற்றத்திற்குத் தயாராக இருந்த அனைத்து மாணவியரும் குருமார்களுக்கு தட்சணை வழங்கியுள்ளனர்.
அதன்பின் மதியம் 2 மணியிலிருந்து சுட்டிக்குத்தி எனப்படும் முகப்பூச்சு துவங்கியுள்ளது. அது முடிந்ததும் இரவு 8:30 மணிக்கு கிருஷ்ண வேஷம் அணிந்து அரை மணி நேரம் மேடையில் அரங்கேற்றம் செய்தார் சப்ரி.
கதகளி அரங்கேற்றம் செய்தபின், பிபிசி தமிழிடம் பேசிய சப்ரி, ''என்னால் பேசவே முடியாத அளவுக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றைக்கு எனது கனவு நனவாகியிருக்கிறது. இதற்காக நான் குரு மார்களுக்கும், குறிப்பாக என் பெற்றோருக்கும் நன்றி செலுத்துகிறேன். அரங்கேற்றத்தின்போது எனக்கு எவ்வித அச்சவுணர்வும் இல்லை. மாறாக நான் பெருமகிழ்ச்சியோடு நடனமாடினேன்.'' என்றார்.
கதகளியில் கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்றும், அதைக் கற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ள சப்ரி, கதகளி கலைஞராக உருவெடுப்பதே தன் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
சப்ரியின் அரங்கேற்றம் நல்ல முறையில் நிகழ்ந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரின் தந்தை நிஜாம் அம்மாஸ், ''இது என் மகளின் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள்.'' என்றார்.
சொந்த ஊரிலிருந்து 280 கி.மீ. தொலைவிலுள்ள கேரள கலா மண்டலத்தில் தங்கிப் படிக்கிறார் சப்ரி.
கதகளியை முழுதாகக் கற்பதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்கிறார் கேரள கலா மண்டலத்தின் கதகளி மாஸ்டர் அனில்குமார். இவர்தான் சப்ரியின் பிரதான கதகளி பயிற்றுநர். கதகளி கற்பதற்கு நேரம் தவறாமை, பொறுமை, உழைப்பு, ஈடுபாடு மற்றும் ஆர்வம் மிக அவசியமென்கிறார் அவர்.
தினமும் காலை 4:30 மணியிலிருந்து 6:30 மணி வரையும், அதன்பின் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையும் கதகளி வகுப்புகள் நடைபெறுமென்றும், மதியத்திற்குப் பின்பே அவர்கள் படிக்கின்ற பாடத்திட்டத்துக்கு அவர்கள் படிக்க வேண்டும் என்கிறார் அனில்குமார்.
சில நாட்களில் மாலை 4:30 மணியிலிருந்து 6:30 மணி வரையிலும் கதகளி பயிற்சிகள் இருக்குமென்றார்.
''கதகளியில் ஒருவரின் பங்கேற்பு அரை மணி நேரம்தான் இருக்கும். ஆனால் அதற்கான ஒப்பனைக்கு 5 மணி நேரமாகும். சாப்ரி அரங்கேற்றத்தில் அரை மணி நேரமே ஆடினார். ஆனால் 5 மணி நேரம் அவருக்கு ஒப்பனை நடந்தது. காலை, மாலை வகுப்புகளிலும், ஒப்பனை மற்றும் பயிற்சிகளிலும் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்கும் சாப்ரி, சொல்வதை துல்லியமாகக் கற்றுக்கொள்வார்.'' என்றார் அனில்குமார்.
கதகளியில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை முழுமையாகக் கற்று அறியவேண்டியது அவசியமென்று தெரிவித்த அனில்குமார், ''அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து, அதற்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்த முடியும். சப்ரி அனைத்தையும் கற்று அறிந்துள்ளார்.'' என்றார்.
தற்போது கேரள கலா மண்டலத்தில் 40 பெண்கள், கதகளி பயின்று வருவதாக பதிவாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
கதகளி எனும் பாரம்பரிய ஆலயக்கலை வடிவத்தில், இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகமும் இசையும் கலந்து உருவான கிருஷ்ண வேஷத்தில் அவர் அரங்கேற்றம் செய்திருக்கிறார். இந்த கிருஷ்ண வேஷத்தை தானே விருப்பத்துடன் தேர்வு செய்ததாக ஊடகங்களில் சாப்ரி தெரிவித்திருக்கிறார்.
இந்த வேஷத்துக்கு அவருடைய குடும்ப வட்டாரத்தில் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால் அதைப் பொருட்படுத்தாமலே அரங்கேற்றத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் நிஜாம் அம்மாஸ். அவருடைய கிராமத்திலிருந்தும் பலர் இந்த அரங்கேற்றத்தைக் காண வந்திருந்துள்ளனர்.
இதுபற்றி பேசிய நிஜாம் அம்மாஸ், ''எங்கள் கிராமத்தில் இதற்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து 'சைபர் தாக்குதல்'கள் இருந்தன. அதை நாங்கள் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல விரும்புகிறோம். எங்கள் மகளின் கனவை நிறைவேற்ற நாங்கள் துணை நிற்கிறோம். ஒரு பெற்றோராக எங்களின் பங்களிப்பு, அவளை மேடையேற்றுவதுதான். கல்வியிலும், கலையிலும் அவள் கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அந்த பயணத்தில் நாங்கள் தொடர்ந்து அவளை நிச்சயமாக ஆதரிப்போம்.'' என்றார்.
தன்னைத் தொடர்ந்து, மற்றொரு இஸ்லாமிய சிறுமியும் மற்றொரு நடனப் பாடவகுப்பில் சேர்ந்திருப்பதாக கூறியுள்ள சப்ரி, தங்களுடைய சமூகத்திலிருந்து மேலும் பல பெண்கள், கேரளாவின் பாரம்பரியமான ஆலயக்கலை வடிவங்களை கற்றுக்கொள்ள முன் வருவார்கள் என்று நம்புகிறார்.
இது தான் விரும்பிக் கற்கும் கலை என்று கூறும் சப்ரி, இதற்கு என் வீட்டிலும் ஊரிலும் எதிர்ப்பு எதுவும் இல்லை, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு