பெரியாருடன் சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் யார்யார்?

Hero Image
Newspoint
Facebook/DravidarKazhagam

சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு.

(சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.)

1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்களுடன் கூட்டங்களில் பங்கேற்றார். அதே தருணத்தில் 1927வரை மகாத்மா காந்தி தொடர்பாக ஆதரவான நிலைப்பாடுகளையே அவர் மேற்கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அந்த மாநாட்டில்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அடுத்த மாநாடு நடக்கும்வரை இயக்கத்தின் தலைவராக டபிள்யு. பி.ஏ. சௌந்தரபாண்டியன் இருப்பார் என்றும் துணைத் தலைவர்களாக பெரியாரும் சர் ஏ.டி. பன்னீர்செல்வமும் இருப்பார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் நாகம்மை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், எஸ்.வி. லிங்கம், கோவை அ. அய்யாமுத்து, எஸ். குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கடுத்த காலகட்டங்களில் தொடர்ந்து கி.ஆ.பெ. விஸ்வநாதம், எஸ் குருசாமி, குஞ்சிதம் குருசாமி, ஜே.எஸ். கண்ணப்பர், ப. ஜீவானந்தம், பாரதிதாசன், சாத்தான்குளம் ராகவன் உள்ளிட்டோரும் இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்க ஆரம்பித்தனர்.

1. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன்
Newspoint
BBC 1928 நவம்பர் 4ஆம் தேதியிட்ட குடி அரசு இதழில் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டின்

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் தலைவராக நியமிக்கப்பட்ட டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் பொறுத்தவரை, அவருடைய அரசியல் செயல்பாடுகள் 1916ல் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திலிருந்துதான் துவங்கியது. 1920ல் அக்கட்சியின் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், பெரியாருடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தவந்த நிலையில், சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் அவர் உருவெடுத்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன்.

பிறகு சென்னை மாகாணம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகள், கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார் இவர்.

கணவரை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பது, சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துவைப்பது ஆகிவற்றிலும் தீவிர கவனம் செலுத்தினார் டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன்.

ராமநாதபுரம் நகராட்சிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் ஓடிய சில பேருந்துகளில் பட்டியல் பிரிவினர் ஏறுவதற்கு தடை என பயணச் சீட்டுகளிலேயே குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அதனை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அந்த பேருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக 'சுயமரியாதைச் சுடரொளிகள்' நூல் குறிப்பிடுகிறது.

அதேபோல, முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார் சவுந்தரபாண்டியன். சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பு நீடித்தாலும், நீதிக்கட்சியின் சார்பிலும் சில செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் சவுந்தரபாண்டியன். ஆனால், பிற்காலத்தில் இயக்கம் சார்ந்த பணிகளில் இருந்து விலகியே இருந்தார் அவர்.

2. எஸ்.ஆர். கண்ணம்மாள்
Newspoint
BBC எஸ்.ஆர். கண்ணம்மாள், 1933 டிசம்பர் 24, புரட்சி இதழ்

சுயமரியாதை இயக்கத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ஆர். கண்ணம்மாள். இவர் பெரியாருடன் இணைந்து 'குடி அரசு' இதழின் பதிப்பாளராக இருந்துவந்தார்.

அந்த இதழில் 1933-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இதழில் "இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?" என்ற ஒரு கட்டுரையை எழுதியதால், அவர் மீது ராஜ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதப் பிற்பகுதியில் பெரியாருடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டு அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

"1933-ஆம் ஆண்டிற்கு முன்பாக, எந்தப் பெண்ணும் பத்திரிகை நடத்தி சிறை தண்டனை பெறவில்லை. ஆங்கில அரசை எதிர்த்து தலையங்கம் வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்ட முதல் பெண் பத்திரிகையாளர் எஸ்.ஆர். கண்ணம்மாள்" என தனது திராவிடப் போராளிகள் நூலில் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

பெரியாரின் இளைய சகோதரியான எஸ்.ஆர். கண்ணம்மாள் தனது அண்ணனின் கொள்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அவரது செயல்பாடுகளுக்கு துணையாக இருந்தவர். பெரியார் காங்கிரஸில் இருந்த காலத்தில் காந்தியின் கொள்கைகளை ஏற்று, கள்ளுக்கடை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் எஸ்.ஆர். கண்ணம்மாளும் ஒருவர்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு, தொடர்ந்து பல கூட்டங்களில் மூட நம்பிக்கையை எதிர்த்துப் பேசிவந்தார் கண்ணம்மாள். ஈரோடு நகரசபையின் கவுன்சிலராக இருந்தபோது, பெண்கள் நலனை முன்னிறுத்தி பல தீர்மானங்களை அவர் கொண்டுவந்தார். சீர்திருத்தத் திருமணங்களை நடத்துவதிலும் இவர் மிகுந்த ஆர்வம்காட்டினார்.

Newspoint
BBC சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 பிப்ரவரியில் நடந்தபோது நீதிக்கட்சியின் பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 3. ஏ.டி. பன்னீர்செல்வம்

டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனைப் போலவே, துவக்கத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிறகு சுயமரியாதை இயக்கத்தோடு நெருக்கமானவர்களில் ஒருவர் ஏ.டி. பன்னீர்செல்வம். இதன் காரணமாக, செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் துணைத் தலைவராக ஏ.டி. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு சுயமரியாதை இயக்க மாநாடுகள், நிகழ்ச்சிகளில் உரையாற்றிவந்தார் ஏ.டி. பன்னீர்செல்வம். தொடர்ந்து பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்திய அவர், சுயமரியாதை இயக்கத்தினரின் வழக்குகளிலும் பங்கேற்றார். 1930களின் இறுதியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் செயல்பாடு ரீதியாகவும் இவரது பங்கு தீவிரமானதாக இருந்தது.

4. பட்டுக்கோட்டை அழகிரிசாமி

சுயமரியாதை இயக்கத்தின் பல தலைவர்கள் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், மிக சாதாரண பின்னணியில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு, அதன் கொள்கைகளைப் பரப்பியவர்களும் நிறையப் பேர் இருந்தனர். அப்படியான தலைவர்களில் ஒருவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. இவர் ஆரம்பத்தில் காந்தி மீதும் காங்கிரசின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் விரைவிலேயே சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திரும்பினார் அழகிரி.

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அதில் ஈடுபாடு கொண்டிருந்த அழகிரி, தனது மேடைப் பிரச்சாரத்திற்காக பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார். அதேபோல, சுயமரியாதை இயக்கக் கருத்துகளை முன்வைத்து தீவிரமாக எழுதியும் வந்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை வரை சுமார் ஒன்றரை மாத காலம் நடைபயணம் மேற்கொண்டார் அழகிரி. இரண்டாம் உலகப் போரின்போது மாவட்ட போர் பிரசார அதிகாரியாக இருந்தபோது, போர் பிரச்சாரத்தின் நடுவே சுயமரியாதை இயக்கக் கருத்துகளையும் பேசியதாக சுயமரியாதை இயக்கச் சுடரொளிகள் நூல் குறிப்பிடுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத் தொண்டராக இருந்த அழகிரி, 1949-லேயே எலும்புருக்கி நோயால் காலமானார்.

5. சாமி சிதரம்பரனார்

சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட மற்றும் ஒரு சித்தாந்தி, சாமி சிதம்பரனார். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் குடி அரசு இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். பெரியார் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, அந்த இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார் சாமி சிதம்பரனார்.

பெரியார் முன்வைத்த கணவரை இழந்த பெண்களின் மறுமணம் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்த சாமி சிதம்பரனார், அதைப் போலவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிறையிலிருந்த காலத்தில் ஒரே மாதத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார். பெரியார் தானே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதாத நிலையில், அந்தப் பணியை தான் செய்ய வேண்டியிருந்ததாக குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கத்தின் பல இதழ்களுக்கு ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். பெரியார் நீதிக் கட்சியை தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்த போது, இயக்கத்திலேயே பலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பெரியாருக்கு ஆதரவாக தொடர்ந்து வாதாடியவர் சாமி சிதம்பரனார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, சாதி மறுப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் போன்ற கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவராக இருந்தார் சாமி சிதம்பரனார்.

6. மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்
Newspoint
Dravidian Stock மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் எழுதிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்'.

சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்த மற்றொரு பெண் தலைவர் மூவலூர் ராமாமிருதத்தம்மாள். இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த ராமாமிர்தத்தம்மாளின் இளம் பருவம் வறுமை மிக்கதாக, பெற்றோரால் கைவிடப்பட்டதாக இருந்தாலும், இந்தத் துயர்களைத் தாண்டி மற்றவர்களுக்காகப் போராடும் மன உறுதியைப் பெற்றிருந்தார் அவர்.

துவக்க காலத்தில் காங்கிரஸ் மீது பற்றுக் கொண்டிருந்த ராமாமிர்தத்தம்மாள், பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தபோது, 'தேவதாசிகள்' என அந்தக் காலகட்டத்தில் அழைக்கப்பட்ட பெண்களை அந்த மாநாட்டின் பார்வையாளர்களாக கொண்டுவந்தார்.

சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநாட்டில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சி முதல் சென்னை வரை சுயமரியாதை இயக்கத்தினர் மேற்கொண்ட நடைபயணத்திலும் இவர் கலந்துகொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

குடி அரசில் தொடர்ந்து எழுதிவந்த ராமாமிர்தத்தம்மையார் தேவதாசிகள் குறித்து தான் அறிந்தவற்றை வைத்து எழுதிய 'தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நூலை எழுதினார். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால இலக்கியத்தில் இந்த நூல், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நூல். பல சுயமரியாதைத் திருமணங்களையும் இவர் நடத்திவைத்தார்.

இந்தத் தலைவர்கள் தவிர, பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை, மீனாம்பாள் சிவராஜ், குத்தூசி குருசாமி, கோவை அய்யாமுத்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம், என். சிவராஜ், சிவகங்கை ராமச்சந்திரன், செ.தெ. நாயகம் உள்ளிட்ட தலைவர்களும் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டினர். இந்தத் தலைவர்களில் சிலர், பிற்காலத்தில் வேறு அரசியல் சித்தாந்தங்களைத் தேர்வுசெய்தாலும், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகாலச் செயல்பாடுகளில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Newspoint