'இந்தியாவுக்கு ஆசிய கோப்பை கப் வேண்டுமென்றால்' - நக்வி வைத்த ஒற்றை நிபந்தனை

Hero Image
Newspoint
Getty Images 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 37வது தலைவராக மொஹ்சின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் நடந்து முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றது. போட்டி முடிந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் இன்னும் போட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தணியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 இன் நிறைவு விழா, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பதற்றங்களை உண்மையாகவே பிரதிபலிப்பதாகத் தோன்றியது.

அதேபோல் இப்போட்டியின் பல ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, வெற்றி பெற்ற அணி கோப்பையை எடுத்துச் செல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட சலசலப்புக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) மன்னிப்பு கேட்டதாகக் கூறி இந்திய ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்தன.

ஆனால், புதன்கிழமையன்று மொஹ்சின் நக்வி இவை அனைத்தையும் மறுத்தார்.

Newspoint
Getty Images இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், கோப்பை பெறாதது அணியின் கூட்டு முடிவு என்று குறிப்பிட்டார்.

தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரை இந்தியாவுக்கு கோப்பை வழங்கப்படாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி மீண்டும் கூறியுள்ளார்.

"ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான நான் அதே நாளில் கோப்பையை ஒப்படைக்கத் தயாராக இருந்தேன். இன்னும் தயாராகவே உள்ளேன். இந்தியா உண்மையிலேயே கோப்பையைப் பெற விரும்பினால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்" என்று நக்வி சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி நிருபர் ஃபர்ஹத் ஜாவேத் தெரிவித்தார்.

'நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்'

செவ்வாய்க்கிழமை துபையில் நக்வி தலைமையில் நடைபெற்ற சமீபத்திய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு நக்வியின் கருத்து வெளியாகியுள்ளது.

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் ஆன்லைனில் பங்கேற்றனர்.

சூர்யகுமார் யாதவின் அணி கோப்பையையும் வெற்றியாளரின் பதக்கங்களையும் பெற்றுக்கொள்ளுமா என்பது குறித்து கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று நம்பப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவரும் அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான நக்வி, "இந்திய ஊடகங்கள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அல்ல, பொய்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பிசிசிஐயிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்திய ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்த நக்வி, "இந்த கட்டுக்கதைகள் மலிவான பிரசாரமே தவிர வேறொன்றுமில்லை. மக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டும்தான் அதன் ஒரே நோக்கமாக உள்ளது. இந்தியா தொடர்ந்து அரசியலை கிரிக்கெட்டில் இழுத்து விளையாட்டின் உண்மையான உணர்வை சேதப்படுத்துகிறது

இந்திய அணி உண்மையிலேயே கோப்பையைப் பெற விரும்பினால், அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து கோப்பையை எடுத்துக்கொள்ளலாம்" என்று எழுதியுள்ளார்.

மொஹ்சின் நக்வி யார்?
Newspoint
Getty Images போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் மொஹ்சின் நக்வி காசோலையை வழங்குகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைவராக உள்ள நக்வி, நாட்டின் உள்துறை அமைச்சகத்தையும் கவனித்து வருகிறார். இவ்வாறு தற்போது மூன்று முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார் நக்வி.

சையத் மொஹ்சின் நக்வி 1978- ஆம் ஆண்டு லாகூரில் பிறந்தார். அவரது குடும்பம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் நகரைச் சேர்ந்தது. தனது ஆரம்பக் கல்வியை கிரசண்ட் மாடல் பள்ளியில் பயின்ற அவர், பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் (ஜிசி) பயின்றார் என பிபிசி உருது குறிப்பிடுகிறது.

பட்டம் பெற்ற பிறகு, நக்வி மேல் படிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவிலிருந்து இதழியல் துறையில் பட்டம் பெற்ற அவர், அதன் பிறகு அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என்னில் இன்டர்ன்ஷிப் முடித்தார்.

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான சிஎன்என், நக்வியை பாகிஸ்தானுக்கு செய்தி சேகரிப்பதற்காக அனுப்பியது.

இளம் வயதிலேயே பதவி உயர்வு பெற்று, அந்த செய்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத் தலைவரானார்.

9/11 தாக்குதலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.

அந்த நேரத்தில், மொஹ்சின் நக்வி சிஎன்என்னுக்காக செய்தி சேகரித்து வந்தார். அப்போது, அவர் முக்கிய நபர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் 2009 வரை சிஎன்என்னுடன் பணியாற்றி வந்தார் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், சிட்டி நியூஸ் நெட்வொர்க்கை நிறுவி, இதழியலில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவினார்.

தனியார் தொலைக்காட்சியை சொந்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சையத் மொஹ்சின் நக்வியின் குடும்பத்தினர் அந்நாட்டின் அரசியலில் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

மக்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாகிஸ்தான் அதிபருமான ஆசிப் அலி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார் நக்வி.

Newspoint
Getty Images இறுதிப் போட்டியில் தெளிவாகத் தெரிந்த பதற்றம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இறுதிப் போட்டியின் முடிவில், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய பரிசளிப்பு விழாவில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏற்க மறுத்ததால் பதற்றம் அதிகரித்தது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ள மொஹ்சின் நக்வி வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கவிருந்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவ்ஜித் சைகியா ஏஎன்ஐயிடம் பேசுகையில், "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரிடமிருந்து கோப்பையை வாங்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், ஆனால் அவர் (நக்வி) பதக்கங்களையும் கோப்பையையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இது மிகவும் மோசமானது. அதேபோல், கோப்பையும், பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

Newspoint
Getty Images

இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ராணுவ மோதல் வெடித்ததற்கு பிறகு, இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் ஆசியக் கோப்பை தொடரில் தான் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

போட்டிக்கு முன்பு இரு அணிகளும் கைகுலுக்காதது, மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்தியா ஏற்க மறுத்தது போன்றவை இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளில் ஏற்பட்ட ஒரு முக்கியச் சரிவைக் குறிக்கிறது.

கடந்த காலங்களில், ராஜ்ஜிய உறவுகளை மேம்படுத்தும் ஒரு வாயிலாக கிரிக்கெட் இருந்தது.

இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், "ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணிக்கு அதற்கு உரிய கோப்பை வழங்கப்படாவிட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று ஒரு பத்திரிகையாளர் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேட்டார்.

"நாங்கள் கிரிக்கெட் விளையாடவும் பார்க்கவும் தொடங்கியதிலிருந்து, ஒரு சாம்பியன் அணிக்கு, அதுவும் கடுமையாகப் போராடி பெற்ற வெற்றிக்குப் பிறகு கோப்பை மறுக்கப்பட்டதை நாங்கள் பார்த்ததில்லை. கோப்பையை பெற நாங்கள் தகுதியானவர்கள். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று அதற்கு சூர்யகுமார் யாதவ் பதிலளித்தார்.

ஆசிய கோப்பையில் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட பிறகு, இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் அக்டோபர் 5-ஆம் தேதி பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் மோதுகின்றன.

இந்தப் போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வார்களா என்பது குறித்த விவாதங்கள் தற்போது தொடங்கியுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Newspoint