காஸாவில் குண்டுச் சத்தம் நிற்குமா? ஹமாஸ் பதிலால் இஸ்ரேலுக்கு டிரம்ப் புதிய அறிவுறுத்தல்

Hero Image
Newspoint
Getty Images

காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடுவை அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதை ஹமாஸுக்கான 'கடைசி வாய்ப்பு' என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைதி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அமெரிக்க அமைதி திட்டத்தில் கூறப்பட்டுள்ள பல முக்கியமான புள்ளிகள் பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் கூறியது என்ன?
Newspoint
Getty Images

இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரிமாற்றத்திற்கான கள சூழல் அமைந்தால், அதிபர் டிரம்பின் முன்மொழிவின்படி உயிருடன் உள்ள இஸ்ரேலிய கைதிகளையும் இறந்துவிட்ட பணயக்கைதிகளின் உடல்களையும் விடுவிக்க ஒப்புக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது.

காஸா நிர்வாகத்தை, பாலத்தீன தேசிய ஒருமித்த கருத்து, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் சுயாதீனமான பாலத்தீன அமைப்பிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

காஸாவின் எதிர்காலம் மற்றும் பாலத்தீன மக்களின் உரிமை பற்றியும் பதிலளித்துள்ளது ஹமாஸ்.

"இது சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் அடிப்படையிலான முழுமையான தேசிய நிலைப்பாட்டுடன் தொடர்புடையது மற்றும் ஹமாஸும் அங்கம் வகிக்கும் தேசிய கட்டமைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது." என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

டிரம்பின் பதில் என்ன?
Newspoint
PA Media

ஹமாஸின் கருத்தை வரவேற்றுள்ள டிரம்ப், நீடித்த அமைதிக்கு ஹமாஸ் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் பதிவில், "தற்போது ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி அவர்கள் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புகிறேன். காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், அப்போது தான் நாம் பணயக் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியே அழைத்து வர முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், "தற்போது பணயக் கைதிகளை மீட்பது மிகவும் ஆபத்தானது. பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியான விவாதங்களில் நாங்கள் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறோம். இது காஸா பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்ட காலமாக தேவையான அமைதி பற்றியது." என்றார்.

ஹமாஸ் அறிக்கை பற்றி காணொளி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் டிரம்ப்.

அதில் அமைதி திட்டத்தை மத்தியஸ்தம் செய்ய தனக்கு உதவிய கத்தார், சௌதி அரேபியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் எகிப்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் டிரம்ப்.

"இது மிக முக்கியமான நாள், இது எவ்வாறு முடிவடைகிறது என்று நாம் பார்ப்போம். தெளிவான மற்றும் இறுதியான வார்த்தையை நாம் பெற வேண்டும். பணயக் கைதிகள் அவர்களின் வீட்டிற்கு திரும்பிச் செல்வதைக் காண ஆவலாக உள்ளேன். மத்திய கிழக்கில் அமைதி எட்டப்படுவதற்கு மிக நெருக்கத்தில் உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பதிலுக்கு கத்தார் வரவேற்பு

காஸாவில் போரை நிறுத்துவதற்கு முக்கியப் பங்கு வகித்த கத்தார் ஹமாஸின் பதிலை வரவேற்றுள்ளது.

"பணயக் கைதிகளைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்டுக் கொண்டு வருவதற்கு ஏதுவாக உடனடி போர்நிறுத்தம் கொண்டு வர டிரம்பின் விடுத்துள்ள அழைப்பிற்கும் காஸாவில் பாலத்தீனர்கள் கொல்லப்படுவதை நிறுத்த விரைவான முடிவுகளை அடைவதற்கும் நாங்கள் எங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்." என கத்தார் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை தொடங்க எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் கத்தார் அறிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் நெதன்யாகுவின் எதிர்வினை என்ன?
Newspoint
Getty Images

டிரம்பின் கருத்துகள் ஊக்கமளிப்பதாக ஹமாஸ் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"கைதிகள் பரிமாற்றத்திற்கும், போரை நிறுத்துவதற்கும், ஆக்கிரமிப்பு பின்வாங்கப்படுவதை உறுதி செய்யவும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஹமாஸ் தயாராக இருக்கிறது." என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிக்கான டிரம்பின் திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணிபுரிய இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

"ஹமாஸின் பதிலை ஒட்டி, டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டமாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்தப் போரை இஸ்ரேல் விதித்துள்ள, டிரம்பின் பார்வையுடன் ஒத்துப்போகக் கூடிய கொள்கையின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மற்றும் அவரின் குழுவுடன் முழு ஒத்துழைப்பு தந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்கிறார் நெதன்யாகு.

பிரிட்டன் வரவேற்பு
Newspoint
Reuters

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிரிட்டனின் ஆதரவை தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் கியர் ஸ்டாமர் நிலையான அமைதியை நோக்கி வேலை செய்யவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பும் தாமதமில்லாமல் ஒப்பந்தத்தை அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ள கியர் ஸ்டாமர், "அமைதி திட்டத்தின் சில பகுதிகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருப்பது சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்து, பணயக்கைதிகளை விடுவித்து மனிதாபிமான உதவிகளை அவசரமாக தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்க்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Newspoint