குட் நியூஸ்..! இனி ரயில்களில் இவர்களுக்கு மட்டும் தான் லோயர் பெர்த் கிடைக்கும்!

Hero Image

இந்தியா முழுவதும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிக்கிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே அனைவரும் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் தான்.ஆனால் பெரும்பாலும் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகும்.


ஏனெனில், ரயில்களில் சீட் ஒதுக்கீடு என்பது பேருந்துகளைப் போல் இல்லை. நாம் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது. ரயில் பெட்டிகளை நிரப்புவதற்கான வரைமுறைகளை பின்பற்றியே, ஒவ்வொரு பயணிகளுக்கும் முன்பதிவும், அவர்களுக்கான இருக்கைகளும் உறுதி செய்யப்படுகின்றன.

இருப்பினும், முன்பு லோயர் பெர்த் கேட்கும் பெரும்பாலான நபர்களுக்கு அது வழங்கப்பட்டு விடும். ஆனால், இனி யாருக்கெல்லாம் லோயர் பெர்த் கிடைக்கும் என்று ரயில்வே புதிய விதிகளை வகுத்துள்ளது.

குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பெர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி, ஸ்லீப்பர் வகுப்பில் 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.மேலும், 2 டையர் மற்றும் 3 டையர் ஏசி பெட்டிகளில் தலா 2 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும், அதில் மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் பயணிப்பவர்கள் அமரலாம் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளைப் போல, மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், ஸ்லீப்பர் வகுப்புகளில் 6 முதல் 7 லோயர் பெர்த்-களும், 3 டையர் ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 லோயர் பெர்த்-களும், 2 டையர் ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 லோயர் பெர்த்-களும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மூத்த குடிமக்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குகீழ் பெர்த் வழங்க வேண்டிய பொறுப்பு டிக்கெட் பரிசோதகருக்கு உள்ளது. அவர்களிடம் கேட்டு கீழ் பெர்த் வாங்கிக் கொள்ளலாம்.