Hero Image

இன்று சித்திரை அமாவாசை : இன்று தர்ப்பணம் கொடுத்தால் பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும்..!


தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் நாம் முன்னோர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, படையல் வைத்து, தர்ப்பணம் கொடுத்து நான்கு பேருக்கு தானம் உணவு கொடுப்பதால் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும்.இன்றைய தினம் அன்னதானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைகளுக்கும் தோஷங்கள் நீங்கும்.இதனால் உங்கள் பரம்பரைக்கே மதிப்பும், மரியாதை கிடைக்கும் அதோடு, வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், துர் அதிர்ஷ்டங்கள் நீங்கி நன்மையும், சந்தோஷமும் பெற முடியும்.

சித்திரை மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் ஆகும். இந்த சித்திரை மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மேற்கண்டவற்றை செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும்.படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை விரைவில் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

செவ்வாய்கிழமை மேஷ ராசிக்கு உகந்த நாள். இந்த நாளில் வழக்கமாகத் தர்ப்பணங்கள் செய்பவர்கள் வீட்டிலேயே தவறாமல் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் வழக்கமில்லாதவர்கள் வீட்டில் சாதம் வடித்து அதில் எள் சேர்த்துக் காக்கைக்கு உணவிட வேண்டும். தங்களின் மூதாதையர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹ்ருதயத்தைப் பாராயணம் செய்தல் அல்லது அதைக் கேட்பது மிகவும் பயன்தரும். விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது நல்லது. இன்றைக்கு நம் அனைவருக்கும் தேவை நல்ல ஆரோக்கியம். அதை அருளும் சூரிய பகவானை வழிபட்டு நம் முன்னோர்களின் ஆசிகளையும் சூரியனின் அருளையும் தவறாமல் பெறுவோம்.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கு யோகமான காலமாக அமையும்.

READ ON APP