பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர்.. சிக்கியது எப்படி?
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அரியானாவை சேர்ந்த மேலும் ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மோதல் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா, பஞ்சாப், காஷ்மீர்குறிப்பாக, அரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அரியானாவை சேர்ந்த மேலும் ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவின் பல்வால் அருகே கோட் கிராமத்தை சேர்ந்த யூடியூபர் வாசிம் அக்ரம். இவர் கடந்த 2022ம் ஆண்டு பாகிஸ்தானின் கசூர் பகுதிக்கு சென்றபோது பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் வாசிமிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இந்தியா வரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வாசிம் உதவி செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரியானா போலீசார் வாசிம் அக்ரமையும், அவரது உதவியாளர் தஹ்க்யூ என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.