மகளிர் உலக கோப்பை: தென் ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!

Hero Image
Newspoint

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சினாலோ ஜாஃப்டா 22 ரன்களுடன் அதிகபட்சமாக விளையாடினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் சுருண்டனர்.

இங்கிலாந்து தரப்பில் லின்ஸி ஸ்மித் 3 விக்கெட்டுகளைப் பிடித்தார். கேப்டன் நாட் ஷிவர்-பிரண்ட், சோஃபி எக்கல்ஸ்டோன், சார்லி டீன் தலா இரண்டு விக்கெட்டுகளும், லாரன் பெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

70 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க வீராங்கனைகள் டம்மி பீமௌண்ட் (21 ரன்கள், 35 பந்துகள்) மற்றும் எமி ஜோன்ஸ் (40 ரன்கள், 50 பந்துகள்) சாமர்த்தியமாக ஆடி இலக்கை எளிதில் எட்டினர். 14.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.