அமெரிக்காவின் முடங்கிய அரசு நிர்வாகத்தால் நாசாவுக்கே இந்த நிலைமையா..?
அமெரிக்க அரசின் நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, டொனால்ட் ட்ரம்ப் அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதையடுத்து அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், அத்தியாவசியம் அல்லாத பல துறைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், சம்பளம் வழங்க முடியாததால், ஊழியர்கள் தற்காலிக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த அரசு நிர்வாக முடக்கம், உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தேவையான அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான பணி, தற்போது இயங்கி கொண்டிருக்கும் விண்கலங்களை கண்காணிக்கும் பணி, சிறு கோள்கள் கண்காணிப்பு, கோள் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் மட்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களில், 15,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விண்வெளி அறிவியல் ஆய்வுகள், பொது கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு பணிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட அத்தியாவசியமற்ற அனைத்து அன்றாட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது நீடித்தால், அதிகளவிலான பணி நீக்கங்கள் ஏற்படக்கூடும் என நாசா ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.