தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!
அகமதாபாதில் நடைபெற்று வரும் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் முதல் டெஸ்ட் போட்டியில், ரவீந்திர ஜடேஜா அசத்தலான ஆட்டத்துடன் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. 286 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணிக்காக கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர். ஜடேஜா 176 பந்துகளில் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் 6 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
இந்த 5 சிக்ஸர்களின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். தோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்ஸர்கள் விளாசிய நிலையில், ஜடேஜா 129 இன்னிங்ஸ்களில் 79 சிக்ஸர்களை பதிவு செய்து முன்னிலை பெற்றுள்ளார்.
தற்போது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்: ரிஷப் பந்த் (90 – 82 இன்னிங்ஸ்), வீரேந்திர சேவாக் (90 – 178 இன்னிங்ஸ்), ரோஹித் சர்மா (88 – 116 இன்னிங்ஸ்), ரவீந்திர ஜடேஜா (79 – 129 இன்னிங்ஸ்), எம்.எஸ்.தோனி (78 – 144 இன்னிங்ஸ்).