ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்..? விறுவிறுப்பான தேர்தல் களம்..!
ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவரே ஜப்பானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார். இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றால் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் சனே டகாயிச்சி பெறமுடியும்.
இந்நிலையில், இப்போட்டியில் முன்னிலை வகிக்கும் சனே (64) டகாயிச்சிக்கும் போருக்குப் பிந்தைய ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராகும் வாய்ப்புடன் மிதவாத சீர்திருத்தவாதியான ஷின்ஜிரோ கொய்சுமியும் (44) முன்னணியில் உள்ளனர். இதனால், ஜப்பானின் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளரான சனே டகாயிச்சி, வலுவான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை முன்னிறுத்தி வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய யாசுகுனி ஆலயத்திற்கு அடிக்கடி செல்வது அண்டை நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், முன்னாள் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமியின் மகனான ஷின்ஜிரோ, அரசியலில் சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். மேலும், இளைய வாக்காளர்களைக் கவரவும் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால், புதிய பிரதமருக்கு சட்டங்களை நிறைவேற்றுவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, மக்கள்தொகை நெருக்கடியைச் சமாளிப்பது என பல்வேறு பெரும் சவால்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.