பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: போலீஸ் வீரர் ஒருவர் பலி; 03 பேர் படுகாயம்..!
பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடனான போர் நிறுத்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் முறிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தெற்கு வஜிரிஸ்தானில் நடந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 09 பேரும், அதே நாளில் பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேரும் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில், நேற்று போலீசாரைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெஷாவரின் பானா மாரா பகுதியில், சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு, போலீஸ் ரோந்து வாகனம் கடந்து சென்றபோது வெடிக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில், போலீஸ் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மூன்று போலீசார் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனால் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.