3 நாள் கழித்து வீடியோ... 3 மணி நேரம் கழித்து ட்வீட் வெளியிடுபவர் தலைவராக முடியாது - மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி காட்டம்..!
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 116 காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த பல்வேறு கட்சியினர் பார்வையிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன் (கேரளா), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, எம்எல்ஏ நாகைமாலி கொண்ட குழுவினர் இன்று (அக்.3) கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த 2 வயதான சிறுவன் துருவிஷ்ணு குடும்பத்தினர் மற்றும் கரூர் ஏமூர்புதூர் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு ஆறுதல் கூறினர்.
கரூர் ஏமூர்புதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்தியப் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, பின்வருமாறு பேசினார்:
"இந்தக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ கட்சியினர் முழுவதுமாகத் தவறிவிட்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தண்ணீரோ, உண்ண உணவோ எதுவுமின்றி சோர்வடைந்துள்ளனர். சம்பவம் நடந்த 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்து, 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் ஒருபோதும் தலைவராக முடியாது.
ஒரு துயர சம்பவம் நடந்திருக்கும்போது, அவர் அங்கு சென்று உதவியிருக்க வேண்டும். கூட்டத்தை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். யார் மீதும் குற்றம் சுமத்துவது அல்லது தண்டனை வழங்குவது எங்கள் நோக்கமல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது. இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், கூட்டத்தில் சிக்கியவர்களை மீட்டு உரிய சிகிச்சை வழங்கி, முதலமைச்சர் இரவோடு இரவாக நேரில் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் 14 வயது மகன் சக்திவேல் பள்ளி செல்லாமல் உள்ளார். தீமையில் ஒரு நன்மை என்பதுபோல, அவரைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. இதற்காக தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது" என்று எம்.ஏ. பேபி பேசினா.
வாசுகியின் வலியுறுத்தல்
கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், "இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளோ, போராட்டங்களோ நடைபெறாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விடக்கூடாது. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.