புரட்டாசி பௌர்ணமி எப்போது? – சிவனை இப்படி வழிபடுங்க!

Hero Image
Newspoint

ஒவ்வொரு மாதமும் பல்வேறு விதமான திதிகள் வந்தாலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையில், முழு நிலவு நாள் முழுக்க இறை வழிபாட்டுக்கென குறிப்பிடப்பட்டுள்ளது. திதிகள் ஒவ்வொரு மாத கால நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு தேதிகளில் முன், பின் வரலாம். அப்படியான பட்சத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி வழிபாடு பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். 2025  ஆம் ஆண்டு புரட்டாசி பௌர்ணமியானது வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபாட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. நாம் வீட்டில் விரதம் இருந்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாட்டாலும் பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

புரட்டாசி பௌர்ணமி சிறப்பு

இந்த புரட்டாசி மாத பௌர்ணமி பாகுளி என அழைக்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு புராண காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது விநாயகரின் தீவிர பக்தரான திருச்சபத முனிவர் மகன் தான் பலி. இவனும் விநாயகரை வழிபட்டு பல்வேறு வரங்களை பெற்றான். அதில் பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகளை உருவாக்கும் வரமும் ஒன்றாகும்.

அவற்றைக் கொண்டு மூன்று உலகங்களையும் பலி துன்புறுத்தினான். அந்த அசுரனின் தொல்லையைப் பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் உதவியை நாடினர். அவர்களை மீட்கும் பொருட்டு திருவுள்ளம் கொண்டு விநாயகரின் பக்தனாக இருந்த போதிலும் பலி அசுரன் மீது சிவபெருமான் போர் தொடுத்தார்.

போரின் முடிவில் சிவகணை பலி அசுரன் மீது பாய்ந்து அவன் சிவனாரின் திருவடிகளில் ஒன்றாக மாறினான். அப்படி அவன் பீடுபேறடைந்த நாள் தான் புரட்டாசி மாத பௌர்ணமி தினமாகும். இந்நாளில் நாம் சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது என்பது நம்பிக்கையாகும்.

 வழிபடுவது எப்படி?

இந்நாளில் அதிகாலையில் இருந்து புனித நீராடி வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டு விரதம் இருப்பவர்கள் அதனை தொடங்கலாம். முடிந்தவர்கள் உணவு எதுவும் எடுக்காமலும், முடியாதவர்கள் பால் அல்லது பலம் எடுத்துக்கொண்டு விரதத்தை தொடரலாம். மாலையில் வீட்டில் அல்லது கோயிலில் சிவனுக்குரிய வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து துதி பாடல்கள் பாடி வழிபட்டால் சிவபெருமான் அருள் காரணமாக முட்பிறவிகள் எல்லாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி எதிர்கால வாழ்க்கைக்கு நாம் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)